west indies cricket team
west indies cricket team Twitter
கிரிக்கெட்

லாரா, ரிச்சர்ட்ஸ் இருந்த அணிக்கு இப்படி ஒரு நிலையா? ODI உலகக்கோப்பைவெளியேறும் பரிதாப நிலையில் WI?

Rishan Vengai

2000 காலகட்டத்திலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களிடம் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணி எதுவென்று கேட்டால், எல்லோரும் ஆஸ்திரேலிய அணியின் பெயரை தான் குறிப்பிடுவார்கள். ஏன் என்று காரணம் கேட்டால் அந்த அணி தான் தொடர்ச்சியாக 3 முறை உலகக்கோப்பைகளை வென்றுள்ளது என்ற பதிலே பெரும்பாலும் வரும். ஏனென்றால் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறுவதே பல அணிகளுக்கு பெரும் கனவாக இருக்கும் நிலையில், ஒரு அணி இறுதிப்போட்டிவரை சென்று ஒரு கோப்பையை வென்றது மட்டுமில்லாமல், அதை தொடர்ச்சியாக செய்து காட்டுவதெல்லாம் பெரிய விஷயம் தானே.

west indies cricket team

ஆனால் இதை எப்படி உலக அரங்கில் செய்வது என்று ஆஸ்திரேலிய அணிக்கு கற்றுக்கொடுத்ததே மற்றொரு அணி தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. உலகின் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை 1975ல் நடந்த போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பைனலில் அதை செய்து காட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி தான். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா இறுதிவரை போராடினாலும், 17 ரன்களில் வெற்றியை தட்டிச்சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒரு கோப்பையை வென்றது மட்டுமில்லாமல், 1979ல் நடந்த 2வது உலகக்கோப்பையிலும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகின் தலைசிறந்த அணியாக கொடிகட்டி பறந்தது அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி.

80ஸ், 90ஸ், 20ஸ் என 3 தலைமுறையாக இருந்த WI சூப்பர் ஸ்டார்கள்!

1980ஸ் என்பது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான காலம் என்று தான் சொல்லவேண்டும். அப்போது அந்த அணியில் உலகின் மாபெரும் வீரர்களான “விவிஐ ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், கோர்டன் க்ரீனிட்ஜ், ஜெஃப் டுஜான், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் மைக்கேல் ஹோல்டிங்” ஆகியோர் ஆடும் 11 வீரர்களில் பங்குபெற்றிருந்தனர். 1983-ல் கூட தொடர்ச்சியாக 3வது உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் சிறப்பாகவே விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆனால் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டியின் முடிவானது இந்தியாவிற்கு சாதகமாக மாறியது. இல்லையென்றால் தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியே பெற்றிருக்கும்.

வெஸ்ட் இண்டீஸின் அந்த கோல்டன் பீரியடுக்கு பிறகான 90ஸ் கால கட்டத்திலும் “பிரையன் லாரா, கார்ல் ஹாப்பர், சந்தர்பால், இயன் பிஷப், கர்ட்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னி வால்ஷ்” போன்ற வீரர்களும், அதற்குபிறகான 2000 விண்டீஸ் அணியில் “கிறிஸ் கெய்ல், ராம்நரேஷ் சர்வான், ஃபிடல் எட்வர்ட்ஸ், டினோ பெஸ்ட், டேரன் சமி, ட்வைன் பிராவோ மற்றும் ரிக்கார்டோ பவல்” போன்ற பல சிறந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

நெதர்லாந்து ஜிம்பாப்வேவிற்கு இடையேயான தோல்வியால் ஆட்டம் கண்ட WI!

இப்படி உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒரு அணியாக இருந்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது தொடர்ச்சியாக இறங்குமுகத்தை கண்டுவருகிறது. அதன் முதல் பிரதிபலிப்பாக 2022 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 குரூப்பிற்கு கூட முன்னேற முடியாமல் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற சிறிய அணிகளுக்கு எதிராகவும் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ். டி20 கிரிக்கெட்டில் தான் அப்படி என்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் பல தலைமுறை வீரர்கள் கட்டிஎழுப்பி வந்த கோட்டையை தற்போது உடைக்கும் நிலைக்கு சென்றுள்ளது விண்டீஸ்.

WI vs Ned / CWC 2023

2023 ஒருநாள் உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வியடைந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பைக்கு தகுதிபெறமுடியாத நிலையின் விளிம்பிற்கே சென்றுள்ளது. இந்நிலையில் ஒரு காலத்தில் எப்படியிருந்த அணி இப்போ இப்படி ஆயிடுச்சே என்று மேற்கிந்திய தீவுகள் அணியை பார்த்து, அந்நாட்டின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டின் ரசிகர்களும் வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

2023 உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டிகள்!

இந்த வருடம் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கிறது. கோப்பைக்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், 8 அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பை விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ளன. மீதமிருக்கும் 2 இடத்திற்காக உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டிகளானது 10 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. அதில் “இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன், அயர்லாந்து, யுஏஇ, நேபால் மற்றும் யுஎஸ்ஏ” முதலிய 10 அணிகள் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் A மற்றும் B என்ற இரண்டு பிரிவுகளில் மோதின.

ICC Cricket World Cup Qualifiers 2023

குரூப் ஸ்டேஜ் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு தலா ஒரு போட்டி வீதம் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடின. தற்போது குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்த நிலையில் A பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், B பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் முதலிய அணிகளும் உட்பட மொத்தம் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சூப்பர் சிக்ஸ் சுற்றில் பங்குபெறும் 6 அணிகளில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகளே, உலகக்கோப்பைக்கான 8 அணிகளுடன் இணைந்து 10 அணிகளாக உலகக்கோப்பையில் விளையாடும்.

குரூப் சிக்ஸ் பாய்ண்ட்ஸ் டேபிள் விவரம்!

குரூப் சிக்ஸ் சுற்றை பொறுத்தவரையில் ஒரு பிரிவில் இருந்து தகுதிபெற்றிருக்கும் ஒரு அணியானது, அதே பிரிவிலிருந்து தகுதி பெற்றுள்ள மற்ற அணிகளுடன் குரூப் ஸ்டேஜ் போட்டியில் பெற்ற வெற்றிக்கான புள்ளியோடு சூப்பர் சிக்ஸ் சுற்றில் இடம்பெறும். அதாவது A பிரிவிலிருந்து தகுதிபெற்றிருக்கும் ஜிம்பாப்வே அணி, மற்ற தகுதிபெற்றிருக்கும் அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே குரூப் ஸ்டேஜ் போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஒரு போட்டிக்கு 2 புள்ளி வீதம் 4 புள்ளிகளோடு சூப்பர் சிக்ஸ் சுற்றில் இடம்பெற்றுள்ளது.

CWC 2023 Qualifiers

நெதர்லாந்து அணியானது ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோற்றும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றியும் பெற்றிருப்பதால் ஒரு போட்டியில் பெற்ற வெற்றியை பொறுத்து 2 புள்ளியோடு இடம்பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியானது தன்னுடன் தகுதிபெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இரண்டிற்கு இடையேயும் குரூப் ஸ்டேஜ்ஜில் தோல்வியை பெற்றுள்ளதால் 0 புள்ளியோடு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் சூழலானது மோசமாகியுள்ளது. B பிரிவை பொறுத்தவரையில் குரூப் ஸ்டேஜ் சுற்றை பொறுத்து இலங்கை அணி 4 புள்ளிகளுடனும், ஸ்காட்லாந்து 2 புள்ளிகளுடனும், ஓமன் அணி 0 புள்ளியுடனும் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் சிக்ஸ் சுற்றிலிருந்து உலகக்கோப்பைக்கு எப்படி செல்லும்?

சூப்பர் சிக்ஸ் சுற்றில் A பிரிவில் தகுதிபெற்ற அணிகள் அனைத்தும், B பிரிவிலிருந்து தகுதிபெற்ற அணிகளோடு மட்டுமே மோதும். அதன் படி ஒரு அணியானது 3 போட்டிகளில் விளையாடும். இந்த 3 போட்டிகளில் பெறும் வெற்றிக்கான புள்ளியானது, மேற்கூறிய படி அந்தந்த அணிகள் ஏற்கனவே வைத்திருக்கும் புள்ளிகளோடு இணைத்துக்கொள்ளப்படும். மொத்தமாக முடிவில் எந்த அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கிறதோ அந்த 2 அணிகளே உலகக்கோப்பைக்கு முன்னேறும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெற்ற படுதோல்வியானது, சூப்பர் சிக்ஸ் சுற்றில் அந்த அணிக்கு எந்த புள்ளியையும் பெற்றுக்கொள்ள முடியாத இடத்திற்கு தள்ளியுள்ளது. இருக்கும் வாய்ப்புகள் படி பார்த்தால் 2 வழியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வாய்ப்பை பார்க்கலாம்.

1. முதலில் அந்த அணி அடுத்து விளையாடவிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்றே ஆகவேண்டும்.

2. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரு தோல்வியை கூட பெறாமல் இருப்பதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான பெரிய பாதகமாக இருக்கிறது. குரூப் சிக்ஸ் சுற்றில் இலங்கை அல்லது ஜிம்பாப்வே 2 அணிகளில் ஒரு அணியாவது 2 போட்டிகளில் நிச்சயம் தோல்வியை பெறவேண்டும். அப்படியே அதில் ஒரு அணி 2 போட்டியில் தோல்வியை பெற்றாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்ரேட்டில் அந்த அணியை விட அதிகமாக இருந்தால் மட்டுமே தகுதிபெறும்.

west indies

அதவாது தற்போது 4 புள்ளிகளுடன் இருக்கும் ஜிம்பாப்வே அணி அடுத்த 3 போட்டியில் 2-ல் தோல்வியடைந்தால் 6 புள்ளிக்கு மட்டுமே செல்லும். அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டியிலும் வெற்றிபெற்றால் 6 புள்ளிகளை பெறும். இந்நிலையில் இரண்டு அணிக்கும் இடையேயான வித்தியாசமானது ரன்ரேட் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், க்ரூப் சிக்ஸுக்கான கடைசி போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இத்தனை தடையையும் தாண்டி வந்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் உலகக்கோப்பைக்கு தகுதிபெற முடியும்.