Rovman Powell
Rovman Powell  Tsvangirayi Mukwazhi
கிரிக்கெட்

இரு முறை சாம்பியன் இந்த உலகக் கோப்பையில் இல்லை. எங்கே கோட்டை விட்டது வெஸ்ட் இண்டீஸ்!

Viyan

வெஸ்ட் இண்டீஸ் - கிரிக்கெட் உலகையே கட்டி ஆண்ட ஒரு அணி... உலகக் கோப்பையின் ராஜாவாய் வலம் வந்த ஒரு அணி... இப்போது உலகக் கோப்பைக்கே தகுதி பெறத் தவறியிருக்கிறது! ஆம், 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் என்ற ஜாம்பவான் அணி இல்லாமல் நடக்கப்போகிறது!

2023 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடக்கிறது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் இந்தியாவோடு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றன. மற்ற 2 அணிகளை முடிவு செய்யும் தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடந்துவருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச் சுற்றிலிருந்து இலங்கையும் வெஸ்ட் இண்டீஸும் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.

ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளோடு 'ஏ' குரூப்பில் இடம்பெற்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ். எதிர்பார்ப்பு என்னவோ 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதுதான். எதிர்பார்த்ததைப்போல் முதலிரு போட்டிகளிலும் வெற்றி பெற்றது அந்த அணி. ஆனால், அடுத்த இரு போட்டிகளிலும் கரீபிய வீரர்களுக்குப் பேரடி காத்திருந்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோற்ற அந்த அணி, நெதர்லாந்துக்கு எதிராக சூப்பர் ஓவரில் வீழ்ந்தது. ஜேசன் ஹோல்டர் சூப்பர் ஓவரில் 30 ரன்கள் வாரி வழங்க, தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்தது வெஸ்ட் இண்டீஸ்.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு அணியும் எத்தனை புள்ளிகள் பெற்றனவோ, அதை அடுத்த சுற்றுக்கும் எடுத்துவரும். இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் 4 புள்ளிகளோடும், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் 2 புள்ளிகளோடும் நுழைய, ஒரு புள்ளிகள் கூட எடுக்காத வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலை பரிதாபமாகவே இருந்தது. முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் என்பதால், சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்குவதற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸின் வாய்ப்பு பாதி போய்விட்டது.

சரி ஓரளவு போராடிப் பார்ப்பார்கள் என்று நினைக்கப்பட, சூப்பர் சிக்ஸின் முதல் போட்டியிலேயே ஸ்காட்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது வெஸ்ட் இண்டீஸ். இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறியிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். 2 முறை உலகக் கோப்பையை வென்று ராஜாவாக வலம் வந்த அணி, 10 அணிகளுக்குள் ஒன்றாகக் கூட முன்னேறத் தவறியிருக்கிறது.

West Indies team

இதே ஸ்காட்லாந்து அணிக்கெதிராக 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றில் தோற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். இப்படி 2 ஆண்டுகளில் 2 பெரும் தொடர்களின் முக்கிய சுற்றுக்கு தகுதி பெறத் தவறியிருப்பது கிரிக்கெட் அரங்கில் அந்த அணியின் இடத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஒரு மகத்தான அணிக்கு என்னதான் ஆயிற்று!

அணி போர்டில் பிரச்சனை, வீரர்கள் டி20 லீகுகளில் ஆடவே விரும்புகிறார்கள் என்று ஆயிரம் முறை விவாதித்துவிட்டோம். ஆனால் அதைக் காரணமாகச் சொல்ல முடியாது. சில வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதைத் தவிர்த்தார்களே ஒழிய, ஒருநாள் போட்டிகளை புறக்கணிக்கவில்லை. சரி வேறு என்ன பிரச்சனை? அவர்களுக்கு எல்லாமே பிரச்சனையாகத்தான் இருந்தது.

இந்த தகுதிச் சுற்றுக்கு முன்னாள் புதிய பயிற்சியாளர்களாக (ஒருநாள் & டி20) முன்னாள் கேப்டன் டேரன் சமியை நியமித்தார்கள். அவருக்கு அணியோடு இணைந்து இத்தொடருக்குத் தயாராக பெரிய அளவில் அவகாசம் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பல்வேறு வீரர்களை தவறான இடங்களில் பயன்படுத்தினார்கள். ஓப்பனர் ஜான்சன் சார்லஸ் மூன்றாவது பொசிஷனில் ஆடவைக்கப்பட்டார். நெதர்லாந்துக்கு எதிராக விளையாடாத கைல் மேயர்ஸ், ஸ்காட்லாந்துக்கு எதிராக ஐந்தாவது பொசிஷனில் இறங்கினார். இப்படி வீரர்களை தவறான இடத்தில் பயன்படுத்தினார்கள். அதுபோக பந்துவீச்சும் மிகவும் சுமாராகவே இருந்தது. சில போட்டிகளில் மேயர்ஸ் 8 ஓவர்கள் போடவேண்டிய நிலையில் இருந்தது அந்த அணி! நல்ல ஃபார்மில் இருந்த அந்த அணியின் லெக் ஸ்பின்னர் யானிக் கரியா காயமடைந்தது அவர்கள் பௌலிங்கை மேலும் வலுவிலக்கவைத்தது.

இவை அனைத்தையும் விட பெரிய பிரச்சனையாக இருந்த ஒரு விஷயம் அவர்களின் ஃபீல்டிங். டுவைன் பிராவோ, கரண் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல் ஆகியோரின் அசத்தல் ஃபீல்டிங்கை பார்த்து வியந்திருப்போம். அட்டகாச ஃபீல்டர்கள் நிறைந்திருந்த அந்த அணி, இப்போது கேட்ச்கள் பிடிக்கவே தடுமாறுகிறது. இந்த தகுதிச் சுற்றின் குரூப் சுற்றில் மட்டும் 10 கேட்ச்களைத் தவறவிட்டது வெஸ்ட் இண்டீஸ்! சூப்பர் சிக்ஸ் போட்டியிலும் கூட முக்கியமான ஒரு கட்டத்தில் கேட்ச் வாய்ப்பொன்றைத் தவறவிட்டனர். இதை அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சமியே கடுமையாக விமர்சித்தார்.

West Indies team

சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்பாக பேசியிருந்த டேரன் சமி, "நாங்கள் இதே மாதிரி ஃபீல்டிங் செய்தால் எங்களுக்கு வாய்ப்பே இருக்காது. இதை கடந்த சில போட்டிகளாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம். எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் கிரிக்கெட்டின் கடவுள்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். இதை சரியாக விவரிக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் அது மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. இது சிம்பிள்தான் - கேட்ச்கள். நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினோம். பௌலர்களிடம் நாம் கேட்பது அதைத்தான். அவர்கள் அந்த வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார்கள். ஆனால், ஃபீல்டிங்கில் அவர்களுக்கு உதவுவதில்லை, பேட்டிங்கிலும் பெரிதாக உதவுவதில்லை" என்றார்.

ஒவ்வொரு ஏரியாவிலும் சொதப்பியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இப்போது அதள பாதாளத்தில் விழுந்திருக்கிறது. ஒரு பெரும் எழுச்சி காணவேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. அது நடக்குமா?!