மார்லன் சாமுவேல்ஸ்
மார்லன் சாமுவேல்ஸ் ட்விட்டர்
கிரிக்கெட்

ஊழல் குற்றச்சாட்டு: வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் 6 ஆண்டுகள் விளையாட தடை.. ஐசிசி அதிரடி!

Prakash J

சாமுவேல்ஸுக்கு 6 ஆண்டுகள் தடை

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக சாமுவேல்ஸுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்மீது 2021-இல் ஐசிசி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட தனிநபர் தீர்ப்பாயம் மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. அதன்படி, அவர் செய்த 4 குற்றங்களின் அடிப்படையில் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வீரரை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் அணுகினால், அதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அதையும் சாமுவேல்ஸ் செய்ய தவறி இருக்கிறார். இதன் காரணமாக சாமுவேல்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: இலவசத்துக்கு எதிராக பேசும் பாஜக, தேர்தலில் ஏன் இலவசங்களை அள்ளிவீசுகிறது? இரட்டை வேடம் போடுகிறதா?

சாமுவேல்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டு 1: பங்கேற்பாளருக்கு அல்லது கிரிக்கெட் விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பரிசு, பணம் அல்லது பிற நன்மைகளின் ரசீது, நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரிக்கு வெளிப்படுத்தத் தவறியுள்ளார். அதாவது ஆட்டநாயன், தொடர் நாயகன் போன்ற விருதுகளுடன் கொடுக்கப்படும் காசோலைகளை அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.

குற்றச்சாட்டு 2: அமெரிக்க மதிப்பில் 750 டாலர் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புடைய அதிகாரபூர்வ ரசீதை, ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்தத் தவறியது.

குற்றச்சாட்டு 3: நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியது.

குற்றச்சாட்டு 4: விசாரணைக்கு தொடர்புடையதாக இருக்கக்கூடிய தகவல்களை மறைப்பதன் மூலம் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணையைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது.

மேற்கண்ட 4 குற்றங்களை அவர் செய்ததாக ஐசிசி நியமித்த தனிநபர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 2019-இல் அபுதாபி டி20 லீக் போட்டியில் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்காக மார்லன் ஒப்பந்தமானார். எனினும், அவர் அப்போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’-உலகிற்கு ஊக்கத்தை தந்த ஊன்றுகோல்; உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்

ஐசிசி  சொல்வது என்ன?

இதுகுறித்து ஐசிசியின் மனிதவள மற்றும் நன்னடத்தைப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல், “சாமுவேல்ஸ் 20 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவர் பல ஊழல் எதிர்ப்பு அமர்வுகளில் பங்கேற்றார். மேலும், ஊழல் எதிர்ப்பு சட்டங்களின் கீழ் தனது கடமைகள் என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும், குற்றங்கள் நடந்தபோது சாமுவேல்ஸ் ஒரு பங்கேற்பாளராக இருந்தார். விதிகளை மீறும் எவருக்கும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்” என்றார்.

2012 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையின் இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக ரன் குவித்த சாமுவேல்ஸ், கடைசியாக 2018-இல் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார். பின்னர், 2020 நவம்பரில் தனது ஓய்வை அறிவித்தார். சாமுவேல்ஸ் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல. 2008 மே மாதம் கிரிக்கெட்டுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பரிசுப் பொருளைப் பெற்றதாக அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ரூ.350 பணத்துக்காக வாலிபரை பலமுறை குத்திக்கொன்ற சிறுவன்.. பிணத்தின்மீது டான்ஸ்.. டெல்லியில் பயங்கரம்