உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
நடப்பு தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதலிரண்டு போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இங்கிலாந்து சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறவிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஹர்பஜன் முதலிய இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடன் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இந்த மறுப்பு வலுவடைந்ததை அடுத்து இன்று நடைபெறவிருந்த போட்டி ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் உடன் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. பாகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் தேதி இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் ராணுவமும் இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இதற்கிடையே இருதரப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து, தாக்குதல் முடிவுக்கு வந்தது.