Ashes: Eng vs Aus
Ashes: Eng vs Aus Twitter
கிரிக்கெட்

மைதானத்திற்குள் புகுந்த போராட்டக்காரரை அலேக்காக தூக்கி வெளியேற்றிய பேர்ஸ்டோவ்! அஸ்வின் கலாய் #Ashes

சங்கீதா

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல்போட்டி பர்மிங்ஹாமில் கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, லார்டு மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பௌலிங்கை தேர்வு செய்து, பேட்டிங் செய்யுமாறு ஆஸ்திரேலிய அணியை அழைத்தது.

Ashes

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி துவங்கிய நிலையில், முதல் ஓவரை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கியிருந்த நிலையில், முதல் ஓவர் முடிவில் 4 ரன்கள் எடுத்திருந்தனர். இரண்டாவது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீச வந்த நிலையில், ‘Just Stop Oil’ குழுவைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் இருவர், மைதானத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் தங்களது கைகளில் வைத்திருந்த ஆரஞ்சு வண்ண பவுடர்களை ஆடுகளத்திற்கு அருகில் வீசியதுடன், “எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் புதிய திட்டங்களுக்கான அனைத்து உரிமங்களையும், ஒப்புதல்களையும் நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். அப்போது, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும், வலது கை பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்று பவுண்டரி லைனுக்கு அப்புறப்படுத்திய நிலையில், மைதான ஊழியர்கள் மற்றொரு நபரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.

Ashes Lord

மேலும் ஆரஞ்சு வண்ண பவுடரை மைதான ஊழியர்கள் அகற்றினர். இதனால் 5 முதல் 10 நிமிடங்கள் போட்டி தாமதமாக துவங்கியது. அதற்குள் ஜானி பேர்ஸ்டோ போராட்டக்காரரை தூக்கியதால் கறை படிந்த தனது உடையை மாற்றி வருவதாக சைகையில் தெரிவித்து விட்டு டிரெஸ்ஸிங் அறைக்கு சென்று உடையை மாற்றிவிட்டு வந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதே ‘Just Stop Oil’ அமைப்பால், போட்டி பாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஏனெனில், இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களில் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலீஷ் ப்ரீமியர்ஷிப் ரக்பி இறுதிப் போட்டிகளின்போதும் இந்த அமைப்பு போராட்டம் நடத்தி இடையூறு விளைவித்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் நடந்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இரண்டாவது டெஸ்ட்டில் நல்ல துவக்கம். பேர்ஸ்டோ ஏற்கனவே சில பளு தூக்குதல்களை செய்துள்ளார்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு 30.2 ஓவர்களில் கவாஜா (17) மற்றும் வார்னர் (66) ஆகிய இரு தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளையும் இழந்து 44 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்துள்ளது.