Ashwin in TNPL
Ashwin in TNPL Twitter
கிரிக்கெட்

வீடியோ: 'DRSக்கு DRS கேட்ட அஸ்வின்... அதே விஷுவல் தானே..' - டிஎன்பிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

சங்கீதா

டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த தொடர், கடந்த 12-ம் தேதி துவங்கியது. வருகிற ஜூலை மாதம் 12-ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கவுள்ளது. இந்த தொடரில் நேற்று கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான திருச்சி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிகள் மோதின.

Dindigul Dragons in TNPL 2023

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் அஸ்வின் செய்த சம்பவத்தை அடுத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். முதல் இன்னிங்சில் திருச்சி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, திண்டுக்கல் அணியின் கேப்டனான அஸ்வின் 13-வது ஓவரை வீசினார். அப்போது 13-வது ஓவரின் 5-வது பந்தை அவர் வீசியபோது, திருச்சி அணி வீரர் ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகியிருந்தார். இதையடுத்து கள நடுவர் ராஜ்குமாருக்கு அவுட் கொடுத்தார்.

இதனையடுத்து, உடனடியாக பேட்ஸ்மேன் ராஜ்குமார் டி.ஆர்.எஸ். கேட்டார். இதனால் மூன்றாம் நடுவரின் பார்வைக்கு சென்று திரும்ப திரும்ப சோதித்து பார்த்தபோது, பேட் தரையில் படும் சமயத்தில் பந்து பேட்டை கடந்து சென்றிருந்தது. இதனால் பந்து பேட்டில் படவில்லை என மூன்றாம் நடுவர் நாட் அவுட் கொடுத்தார்.

Ashwin asking 2nd DRS

பொதுவாக டி.ஆர்.எஸ். கேட்டு மூன்றாம் நடுவர் முடிவை அறிவித்துவிட்டால், போட்டி அடுத்த பந்துக்கு சென்றுவிடும். ஆனால் மூன்றாம் நடுவரின் முடிவால் அதிர்ச்சியான அஸ்வின், கேப்டன் என்ற முறையில், டி.ஆர்.எஸ்.-க்கு, மீண்டும் டி.ஆர்.எஸ். கேட்டார். இதையடுத்து மூன்றாம் நடுவர் அதே பந்தை ரீப்ளே செய்து, மீண்டும் நாட் அவுட் என்றே தீர்ப்பு வழங்கினார்.

அஸ்வின் டி.ஆர்.எஸ். கேட்டதும் அதே விஷுவலை தானே மறுபடியும் ரீப்ளே செய்து சோதிப்பார்கள் என்று வர்ணனையில் இருப்பவர் கருத்து சொன்ன நிலையில், ரசிகர்களும் அஸ்வினை செயலை வேடிக்கையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட்டில் உள்ள விதிகளை அஸ்வின் வித்தியாசமாக களத்தில் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். அதனாலேயே அவர் அவ்வப்போது கிரிக்கெட் விஞ்ஞானி என்று அழைக்கப்படுவார். அப்படி அவரது மன் கட் அவுட் முதல் தற்போதைய டி.ஆர்.எஸ். வரை வித்தியாசமாக உள்ளதாகவே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.