வைபவ் சூர்யவன்ஷி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

“சச்சினைப் பாருங்க..” கோபப்படும் வைபவ் சூர்யவன்ஷி.. அறிவுரை வழங்கிய வாசிம் ஜாபர்!

இலங்கை வீரருடன் வளர்ந்து வரும் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Prakash J

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில், இந்திய இளம்வீரரான வைபவ் சூர்யவன்ஷி கடும் கோபத்துடன் எதிரணி வீரரைத் தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சூர்யவன்ஷியின் இந்தக் கோபத்திற்கு இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகேவின் கருத்தே காரணம் எனக் கூறப்படுகிறது. வைபவ், போட்டி முடிந்த வெளியேறிய நிலையில் வீசென், "போட்டி முடிந்துவிட்டது... இனி நீ வீட்டுக்குப் போ!" என வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த வீரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இது, கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பிய நிலையில், வளர்ந்து வரும் வைபவுக்கு ஆதரவாகப் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் அறிவுரை வழங்கியுள்ளார். இதற்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் குணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

இதுகுறித்து அவர், “வைபவ், இதைக் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறார். அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்துள்ளதால், மக்கள் அவரை வம்பிழுக்கவும் அவருக்கு எதிராகச் செயல்படவும் முயற்சிப்பார்கள். அவர், இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றக் கூடாது, குறிப்பாக கைகலப்பில் ஈடுபடவே கூடாது. இதில் அவரது தவறுதான் என்று நான் கூறவில்லை. ஒருவேளை, இலங்கை வீரர்கள் அவரிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருக்கலாம். ஆனால், என்ன நடந்தாலும் கைகலப்பில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. இளம் வயதிலேயே கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரும் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் அமைதியாக இருந்தார்” என அவர் சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கியுள்ளார்.