நவீனகால கிரிக்கெட்டின் பந்துவீச்சு ஜாம்பவான் என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களால் கொண்டாடப்படுகிறார் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஷாட்டஸ்ட் ஃபார்மேட்டான டி20-க்கு மட்டும்தான் சரிபட்டுவருவார் என்ற கூற்றை உடைத்த பும்ரா, 3 வடிவ கிரிக்கெட்டிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டி உலகத்தின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
தன்னுடைய புத்தி கூர்மை, ஷார்ப்பான யார்க்கருடன், இன்ஸ்விங் - அவுட்ஸ்விங், ஸ்லோவர் டெலிவரி என அனைத்து வேரியேசன்களையும் வைத்திருக்கும் பும்ராவை, ’தி கோட்’ என உலக வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் பாகிஸ்தானின் பந்துவீச்சு ஜாம்பவானான வக்கார் யூனிஸ், பும்ரா இதுவரை உலகம் காணாத சிறந்த பந்துவீச்சாளர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, சமீபத்தில் வக்கார் யூனிஸை சந்தித்தபோது, அவருடன் காரில் பயணித்தபோது பும்ராவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு அவரது கருத்துக்களைக் கேட்டதாக தெரிவித்தார். அப்போது பும்ராவின் உயர்ந்த திறமை மற்றும் கூர்மையான கிரிக்கெட் மூளையை பாராட்டிய யூனிஸ், பும்ரா "எங்கள் அனைவரையும் விட சிறந்தவர்" என்று பதிலளித்ததாக தெரிவித்துள்ளார்.
வக்கார் யூனிஸ் உடனான உரையாடல் குறித்து பேசியிருக்கும் சோப்ரா, “நாங்கள் ஒரு காரில் இருந்தோம். வக்கார் யூனிஸ் என்னுடன் இருந்தார். நான் அவரிடம் கேட்டேன், 'வாசிம் அக்ரமின் பந்துவீச்சில் உள்ள வேரியேசன் மற்றும் அவரது கட்டுப்பாட்டிற்காக முழு கிரிக்கெட் உலகமும் அவரை ஜாம்பவானாக மதிக்கிறது. அவர் மிகச் சிறந்தவர். பும்ராவும் ஒரு வலது கை வாசிம் அக்ரம் போன்றவர் தானே என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'இல்லை, அவர் எங்கள் அனைவரையும் விட சிறந்தவர். அவரது வயதில் எங்களுக்கு அவரைப்போலான சிந்தனை நிலை இருந்ததில்லை. அவரது திறமை சிறந்தது, அவரது சிந்தனை சிறந்தது. உலகம் இதுவரை காணாத சிறந்தவர் பும்ரா" என்று யூனிஸ் கூறியதாக ஆகாஷ் சோப்ரா கூறினார்.