india pakistan match
india pakistan match Twitter
கிரிக்கெட்

“இந்தியானாவே பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகமாகிடும்; அக்தருடன் சண்டையிட காத்திருக்கிறேன்”- சேவாக்

Rishan Vengai

உலகக்கோப்பைத் தொடர்... அதிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் சொல்லவா வேண்டும்? இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையேவும் அதிக எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். அந்தளவு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் அனல் பறக்கும் போட்டியாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டியானது அமையும்.

இரண்டு நாட்டு வீரர்களும் தங்களுடைய அணியின் வெற்றிக்காக உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள். என்னதான் ரசிகர்களின் மனநிலை என்பது தற்போது வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவப்பட்ட மனநிலையை எட்டியிருந்தாலும், இந்தியா பாகிஸ்தான் என்ற ரைவல்ரி போட்டியின் முடிவானது கொஞ்சம் அதிகப்படியான உணர்ச்சிப்பெருக்கோடே பார்க்கப்படும். அந்தளவு இரண்டு நாட்டு ரசிகர்களும் போட்டியின் வெற்றி தோல்வியை தங்களுடைய வெற்றி தோல்வியாகவே பாவிப்பர்.

இந்நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கும் போட்டியாக மாறியுள்ளது. அட்டவணையின்படி, அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. அந்த அனல் பறக்கும் மோதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர் சேவாக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.

“ஷோயப் அக்தருடன் சண்டையிட காத்திருக்கிறேன்!”

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் குறித்து பேசியிருக்கும் சேவாக், “இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மீது தான் அனைவருடைய கவனமும் இருக்கப் போகிறது. அந்த ஆட்டத்தின் போது சமூகவலைதளத்தில் ஷோயப் அக்தருடன் சண்டை போட நான் தயாராக இருக்கிறேன். இதுவரை இந்தியா உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்கவில்லை என்று பதிவு சொல்கிறது. நாங்கள் (இந்திய அணி) 7-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளோம், அதில் ஒரு முறை மட்டுமே சேஸிங் செய்துள்ளோம். மற்றபடி ஒவ்வொரு முறையும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கையே போட்டுள்ளது. அக்டோபர் 15 அன்று என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த போட்டியில் அழுத்தத்தை நன்றாகக் கையாளும் அணி வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார். உலகக்கோப்பை அட்டவணை வெளியீட்டு நிகழ்வில் சேவாக் இதை கூறியுள்ளார்.

India pakistan

இந்தியா - பாகிஸ்தானில் எந்த அணி அழுத்தத்தை நல்ல முறையில் கையாளப்போகிறது என்பது குறித்து பேசிய அவர், “தற்போது இந்தியா அழுத்தத்தைக் நன்றாக கையாளுகிறது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதேசமயம் பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் அவர்கள் 1990களில் அழுத்தத்தை சமாளித்து நன்றாக விளையாடினர். ஆனால் 2000க்குப் பிறகு இந்தியா அந்த அழுத்ததை பாகிஸ்தான் மீது அதிகமாக போட்டுள்ளது. அவர்கள் அழுத்தத்தை உணரவில்லை என்று பலர் கூறுகிறார்கள், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதையே தான் இந்திய அணி பற்றியும் நாங்கள் சொல்கிறோம்.

எதுவாயினும், முடிவில் இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி. இதில் உணர்ச்சிகளும், அழுத்தமும் அதிகமாக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.