3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி, முதற்கட்டமாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஏற்கெனவே 1-1 என சமன் பெற்றிருக்கும் நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 137 ரன்களிலும் கிளென் பிளிப்ஸ் 106 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 84 ரன்களை வாரி வழங்கினார்.
பின்னர், கடுமையான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் விராட் கோலியும் நிதிஷ் ரெட்டியும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், நிதிஷ் ரெட்டி 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தபடி இருந்தார் விராட் கோலி. அதற்குப் பிறகு ஜடேஜா 12 ரன்களில் வெளியேறினாலும், ஹர்சித் ராணா தாக்குப் பிடித்து நின்றார். ஆயினும் அவரும் 52 ரன்களில் வெளியேறினார். அவருக்குப் பிறகு தொடர்ந்து விக்கெட் சரிய ஆரம்பித்தது. இதற்கிடையே, போராடி சதமடித்த விராட் கோலியும் வெளியேறினார். விராட் கோலி இருந்தவரை ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்த நிலையில், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்தியாவின் தோல்வி உறுதியானது. தனி ஒருவனாகப் போராடிய அவரது சதமும் வீணானது. அவர் நின்றிருந்தால், இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பது ரசிகர்களின் குரலாக இருந்தது.
இறுதியில் இந்திய அணி, 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி, 41 ரன்களில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி, 108 பந்துகளில், 10 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 124 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் அவர் சதம் அடித்ததன் மூலம் தனது, 54ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். இந்தப் பட்டியலில் அவரே முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 85வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.