சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இந்திய பேட்டிங் பரம்பரையின் வாரிசு விராட் கோலி... சச்சினை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் நான்காவது வரிசையில், தனி சம்ராஜ்யத்தை நடத்திக்கொண்டிருப்பவர். பல போட்டிகளில் இந்தியாவின் ஒற்றை நம்பிக்கையாக இருந்து வந்திருப்பவர்...
36 வயதான அவர், இந்தியாவிற்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 46.85 ரன்கள் சராசரியுடன் 9 ஆயிரத்து 230 ரன்களை குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்திருக்கிறார். 68 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய கோலி, 40 போட்டிகளில் வெற்றிக்கு அழைத்து சென்றிருக்கிறார். வெறும் 17 போட்டிகளில் மட்டுமே தோல்விகளை சந்தித்திருக்கிறார்.
இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் பட்டியலில், விராட் கோலியை நான்காவது இடத்தில் அமர்த்தியிருக்கிறது. அவரது தலைமையில்தான் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது...
இப்படி கேப்டனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சி வந்த கோலி, திடீரென 2022 ஆம் ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோன்றதொரு அதிர்ச்சியாக, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போதிலிருந்தே, தனது பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக சக வீரர்களிடம் விராட் கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில், மீண்டும் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த விராட் கோலி விரும்பியதாகவும், ஆனால் இளம் வீரரை கேப்டனாக்க விரும்பிய இந்திய கிரிக்கெட் வாரியமும், அணியின் பயிற்சியாளர் கம்பீரும் அவரது விருப்பத்தை ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஓய்வு பெறும் முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு பிசிசிஐ நிர்வாகிகள் விராட் கோலியை அறிவுறுத்தியுள்ளதாகவும், அவருடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணியை சுமந்து செல்ல வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்கான வலுவும் அவரது தோள்களில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.