டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில், டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதும் ரஞ்சிப் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ரயில்வேஸ் அணி 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் உபேந்திர யாதவ் 95 ரன்களையும், கரண் சர்மா 50 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியில் நவ்தீப் சைனி, சுமித் மதூர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை டெல்லி அணி தொடங்கியது. முதல் நாள் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக ஆடிய யஷ் துல் 32 ரன்களில் வெளியேறியதை அடுத்து விராட் கோலி களமிறங்கினார்.
ரஞ்சித் தொடரின் முதல் சுற்றிலேயே விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவர் விளையாடாத நிலையில், நடந்துவரும் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். விராட் கோலி களமிறங்குவதால் தேசம் முழுவதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் 12 ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சிப் போட்டியில் பேட்டிங் செய்ய போகிறார். 2ம் நாள் ஆட்ட தொடக்கத்தின்போதே களத்தில் விராட் கோலியைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வத்தைக் காண முடிந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தின் ஊடாகத்தான் விராட்கோலி பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்தது.
27 ஆவது ஓவரை ஹிமான்ஷு சங்வான் வீசினார். அதன் 3 ஆவது பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே போல்ட் ஆனார். ஹிமான்ஷூ வீசிய இன்ஸ்விங் பந்து நேராக ஆஃப் ஸ்டெம்பைத் தாக்கியது. விராட்டின் விக்கெட் வீழுந்ததும் பந்துவீச்சாளர் ஆக்ரோஷமாக தனது கொண்டாட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆரவாராமாக இருந்த மைதானம் ஒரே நொடியில் அமைதியானது. விராட் கோலி 6 ரன்களில் வெளியேறியதும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். தற்போது டெல்லி அணி 168 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது.