இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்றுள்ளனர். டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள், ஒருநாள் வடிவத்தில் மட்டும் விளையாடிவருவதால் தங்களுடைய ஃபார்மை தொடரும் வகையில் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இளம் வீரர்களுடன் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ள விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சம்பளம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
நேற்று நடந்த விஜய் ஹசாரே போட்டியில் 61 பந்தில் 77 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கான பரிசுத் தொகையாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதை சிரித்த முகத்துடன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
அவருடைய வருடாந்திர சம்பளம் 180 கோடி என சொல்லப்படும் நிலையில், ஒருநாளுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை அவருக்கு வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூபாய் 6 லட்சத்தை சம்பளமாக வழங்குகிறது பிசிசிஐ.
இந்தசூழலில் தான் விஜய் ஹசாரே டிராபியில் கோலி மற்றும் ரோகித்தின் சம்பளம் வெளியாகியுள்ளது. விஜய் ஹசாரே தொடரில் சம்பளமானது வீரர்களுக்கு விளையாடிய லிஸ்ட் ஏ போட்டிகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது.
அதன்படி 40 லிஸ்ட் ஏ போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்தால் ஒரு போட்டிக்கு 60,000 ரூபாயும், 21 முதல் 40 போட்டிகள் வரை விளையாடியிருந்தால் 50,000 ரூபாயும், 21 போட்டிகளுக்கு குறைவாக விளையாடியிருந்தால் 40,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் டிராவல், தங்குமிடம் அனைத்திற்கும் செலவை ஏற்றுக்கொள்ளும் பிசிசிஐ, ஆட்டநாயகன் விருது வென்றால் ரூ.10ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்குகிறது. இதனடிப்படையில் இந்தியாவின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் ரூ.60,000 வழங்கப்படுகிறது.