varun chakravarthy web
கிரிக்கெட்

”இந்தியாவுக்கா ஆடப்போறனு சிரிச்சாங்க; அந்த 4 பேர்தான் என் வளர்ச்சிக்கு காரணம்” - வருண் சக்கரவர்த்தி

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை 26 வயதில் தொடங்கிய வருண் சக்கரவர்த்தி எதிர்கொண்ட எதிர்வினைகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 12 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்தது. இதன்மூலம் அதிக சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகள் வென்ற அணியாக ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.

இந்த தொடரில் கடைசி 3 போட்டிகளில் இந்தியாவிற்காக களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 3 போட்டியில வெறும் 15.11 சராசரியுடன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதில் நியூசிலாந்துக்கு எதிராக வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் அடங்கும்.

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தியை கணிக்க முடியாமல் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் திணறினர். தன்னை பொறுத்தவரை தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு தான் வழங்கி இருக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் வருணை புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், 26 வயதில் மிகத்தாமதாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய வருண் சக்கரவர்த்தி, எதிர்கொண்ட மோசமான விசயங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

26 வயசுல வித்தியாசமா டிரை பண்ணி இந்தியாவுக்கா ஆடப்போற..

கடந்த 50 ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் 33 வயதில் இந்தியாவிற்காக அறிமுகமான வயதான வீரராக அணிக்குள் எடுத்துவரப்பட்டார் வருண் சக்கரவர்த்தி. வெறும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் வருண் சக்கரவர்த்தி, இந்திய அணிக்காக கோப்பை வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில், 26 வயதில் மிகத்தாமதமாக கிரிக்கெட் ஆடத்தொடங்கிய போது எதிர்கொண்ட மோசமான விசயங்களை பகிர்ந்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி

கோபிநாத் யூடியூப் சேனலில் நேர்காணலில் பேசியிருக்கும் வருண் சக்கரவர்த்தி, “முதலில் வேகப்பந்து வீச்சாளராகவே கிரிக்கெட் விளையாடினேன. ஆனால் இரண்டே மாதத்தில் என்னுடைய காலில் காயம் ஏற்பட்டு என்னால் தொடர்ந்து வேகப்பந்துவீச முடியாமல் ஸ்பின் பவுலிங் போட முயற்சி செய்யலாம் என முயற்சி செய்தேன். அப்போது “நீ ஃபாஸ்ட் பவுலிங் போடாம, ஏன் ஸ்பின் பவுலிங் போடுற” என கேட்டார். அதற்கு ”இல்ல அண்ணா நான் புதுசா டிரை பண்றேன்னு சொன்னன்; புதுசா டிரை பண்ணி என்ன இந்தியாவுக்கா ஆடப்போறனு சொன்னார்; அதைக்கேட்டு சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “20 வயதுக்கு மேல் எந்த கிரிக்கெட் அகாடமியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் ரஷீத்கான் போன்ற பவுலர்களின் வீடியோவை தொடர்ச்சியாக பார்த்து, இரவில் அரசு மைதானங்களுக்கு சென்று விடிய விடிய பயிற்சி மேற்கொள்வேன். இந்தியாவில் மட்டும் ஏன் மிஸ்டிரி ஸ்பின்னர் இல்லை என்ற கேள்வி என்னுள் எழும், இந்தியாவில் ஒரு ரஷீத்கான் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் மிஸ்டிரி பவுலிங்கை கையில் எடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த 4 பேர்தான் என்னை உயர்த்தியவர்கள்..

தன்னுடைய கிரிக்கெட் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிவர்களை நினைவுகூர்ந்த வருண் சக்கரவர்த்தி, “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான நபர் என்றால் தினேஷ் கார்த்திக் தான், அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அஸ்வினால் தான் நான் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக எடுக்கப்பட்டேன். பின்னர் தினேஷ் கார்த்திக் என்னை கேப்டனாக இருந்தபோது கேகேஆர் அணியில் எடுத்துச்சென்றார். அங்கிருந்து என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முறை படுத்தியவர் அபிஷேக் நாயர்.

varun chakravarthy

26 வயதிற்கு மேல் கிரிக்கெட் விளையாட சென்றதால் எனக்கு கிரிக்கெட் வீரர்களின் டெய்லி வாழ்க்கை எப்படி இருக்கும், எப்படி தயாராக வேண்டும் என எதுவுமே தெரியவில்லை. அப்போது அபிஷேக் நாயர் தான் அவருடைய வீட்டின் அருகிலேயே ரூம் எடுத்து தங்கவைத்து, பிரசீத் கிருஷ்ணா, நாகர்கோட்டி போன்ற வீரர்களுடன் சேர்த்து கிரிக்கெட் வீரர்களின் தினசரி வாழ்க்கையை புரியவைத்தார். அங்கிருந்து தான் நான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.

இந்தியாவிற்கு அறிமுகமானதில் கவுதம் கம்பீரின் பங்கு பெரியது. அவர் தான் இந்த பையன் கேகேஆர் அணியில் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரை அணியில் எடுக்க விரும்புவதாக, என்னை அணியில் எடுத்துவந்தார்” என்று வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.