சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணி 6 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ளது. வருண் சக்கரவர்த்தி தலைமையில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் பலவீனமாக செயல்பட்டுவருவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்..
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்..
அந்த வகையில், அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல், ஆயுஸ் மாத்ரே, அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடிவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் விளையாடிய 6 போட்டிகளில் ராஜ்குமார், ஜகதீசன் மற்றும் சாய் கிஷோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும் விதமாக பேட்டிங் ஆடுகிறார்கள்.. பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகிறது தமிழ்நாடு..
உலகின் நம்பர் 1 டி20 ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி அணியை கேப்டனாக வழிநடத்தினாலும் அவருக்கு சையத் முஷ்டாக் அலி தொடர் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. மற்ற வீரர்களும் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சொதப்புகிறார்கள்.. இதன்காரணமாக 6 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது..
இன்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக விளையாடிய தமிழ்நாடு 207 ரன்களை விட்டுக்கொடுத்தது. தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிவரும் ஜார்கண்ட் கேப்டன் இஷான்கிஷானை 2 ரன்னில் வீழ்த்தியதோடு, 29 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதும் தமிழ்நாடு அணி 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது.. அனைத்து பவுலர்களுக்கும் 8 ரன்னுக்கு மேலான எகானமியில் பந்துவீசினர், 3 பேர் 12 ரன்களுக்கு மேலான எகானமியை கொண்டிருந்தனர்..
பவுலிங்கில்தான் இப்படி என்றால் பேட்டிங்கிலும் சாய் சுதர்சனை தவிர்த்து வேறு யாரும் பெரிய இம்பேக்ட்டை ஏற்படுத்தவில்லை.. சாய் சுதர்சன் 64 ரன்கள் அடித்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் துஷார் 27 ரன்கள் அடித்திருந்தார்.. 20 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே அடித்த தமிழ்நாடு 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..
இந்தசூழலில் கிரிக்கெட் அனலிஸ்ட் Pdogg தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாடு அணியின் செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.. அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாடு கிரிக்கெட்டில் திறமைகள் அதிகமாகி உருவாகி வருகின்றன. அவர்கள் இப்படிச் செயல்படுவதைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்பேற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய ஏமாற்றத்தை பதிவிட்டு வருகின்றனர்.