பீகாரில் உள்ள போடார் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 10ஆம் வகுப்பு (CBSE)தேர்வை எழுதவில்லை என அவரது பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. என்றாலும், அடுத்த தேர்வை அவர் நிச்சயமாக எழுதுவார் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இளம் வீரராக வலம் வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதே நிறைந்த பாலகன் என்றாலும், கிரிக்கெட் என்று வந்துவிட்டால் போதும், எதிரி தன்னைவிட எத்தனை வயது மூத்தவராக இருந்தாலும் பவுண்டரி, சிக்ஸ்ர அடிப்பதில் வல்லவராக திகழ்கிறார். ஐபிஎல்லில் சதமடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த சூர்யவன்ஷி, இன்று தாம் பங்கேற்கும் போட்டித் தொடர்களிலும் எல்லாம் தவறாமல் ஒரு சதத்தைப் பதிவு செய்துவிடுகிறார். இதன்மூலம் தாம் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சதமடித்த இளைய இந்திய வீரராக அவர் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்கூட சதமடித்து கதம் செய்தார். அந்தப் போட்டியில் மட்டும் அவர் வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் என வாணவேடிக்கை காட்டி 175 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில், பீகாரில் உள்ள போடார் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 10ஆம் வகுப்பு (CBSE)தேர்வை எழுதவில்லை என அவரது பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் என்.கே.சின்ஹா, “அவர் இன்று தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்திற்கு வரவில்லை. சிபிஎஸ்இ கொள்கையின்படி அவரை தேர்வு எழுதாமல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு மாணவர் தேர்வு எழுதாமல் இருந்தால், அவரை தேர்வு எழுதாமல் இருந்ததாகக் குறிப்பிட வேண்டும். அவர் வந்து தேர்வெழுதுவார் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அவருக்கு வேறு பல கடமைகள் உள்ளன. கிரிக்கெட் போட்டி அல்லது பயிற்சி இருக்கலாம். அடுத்த தேர்வை அவர் நிச்சயமாக எழுதுவார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளியின் இயக்குநர் ஏ.கே. பிந்து, "வைபவின் தேர்வு படிவம் நிரப்பப்பட்டு, அவருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுவிட்டது. அவருக்கு, நகரத்தில் உள்ள போடார் சர்வதேசப் பள்ளியில் தேர்வு மையத்தை வாரியம் நியமித்திருந்தது. எனினும் தற்போது, வைபவ் கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் வரவிருக்கும் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார்" எனத் தெரிவித்தார்.