யு19 உலகக்கோப்பையில் 175 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷி cricinfo
கிரிக்கெட்

’புது சரித்திரம்..’ பறந்த 15 சிக்சர்கள்.. FINAL-ல் 175 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி! பிரமாண்ட சாதனை!

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்தார் 14 வயதேயான இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி.

Rishan Vengai

2026 யு19 உலகக்கோப்பை இறுதியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் அடித்து புதிய சரித்திரம் படைத்தார். 80 பந்தில் 15 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் அடித்து அதிவேகமாக 150 ரன்களை கடந்தார். இந்திய அணி 268/3 ரன்கள் அடித்து விளையாடி, யு19 உலகக்கோப்பை இறுதியில் அதிக ரன்கள் குவித்த அணியாக வரலாறு படைத்தது.

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய யு19 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.

2026 யு19 உலகக்கோப்பை

ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

உடைக்கப்பட்ட பல சாதனைகள்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் விளாசி புதிய சரித்திரத்தை தன் பெயரில் எழுதினார். வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய சூர்யவன்ஷி அதிவேக 150 ரன்களை கடந்து 175 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி 28 ஓவரில் 268/3 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது. யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணியாக வரலாறு படைக்கும் விதமாக விளையாடிவருகிறது.

வைபவ் சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி படைத்த சாதனைகள்:

*அதிவேகமாக யு19 கிரிக்கெட்டில் 150 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி, ஏற்கனவே 98 பந்தில் இருந்த சாதனையை 71 பந்தில் முறியடித்துள்ளார்.

*யு19 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 15 சிக்சர்கள் அடித்த முதல் வீரராக சாதனை

*யு19 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி, 55 பந்தில் சதமடித்த வைபவ் 4 பந்தில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

*யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த 3வது இந்திய வீரராகவும், 6வது உலக வீரராகவும் வரலாறு படைத்தார்.