இந்தப் போட்டியில் உலகின் முதன்மைப் பந்துவீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஓவரை, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக எதிர்கொண்டார். எனினும், பும்ராவின் முதல் பந்தைச் சந்தித்த வேகத்திலேயே அதை சிக்ஸருக்கு அனுப்பி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்கவைத்தார்.
ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு மத்தியில் 19ஆவது ஐபிஎல் தொடரும் இந்தியாவில் களைகட்டி வருகிறது. அந்த வகையில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் ஜெயித்த மும்பை அணி, ராஜஸ்தானை முதலில் பேட் செய்ய கேட்டுக் கொண்டது. அதன்படி, அவ்வணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி 39 ரன்கள் எடுத்தார். பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, 11 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ரன்களே எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முன்னதாக இந்தப் போட்டியில் உலகின் முதன்மைப் பந்துவீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஓவரை, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக எதிர்கொண்டார். எனினும், பும்ராவின் முதல் பந்தைச் சந்தித்த வேகத்திலேயே அதை சிக்ஸருக்கு அனுப்பி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்கவைத்தார். அவருடைய பேட்டிங்கைக் கண்டு, பும்ராவே வியந்து சிரித்தார். தவிர, மேலும் அதே ஓவரில் இன்னொரு பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பி ஆச்சர்யமளித்தார்.
இதன்மூலம், அவரது மார்க்கெட் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தவிர, எதிர்காலத்தில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிசிசிஐ தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினரான ஜதீன் பரஞ்சபே, சூர்யவன்ஷி எதிர்காலத்தில் மும்பை அணிக்காகவே விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார். அவர் சொல்வதுபோன்று ஐபிஎல்லில் இது எல்லாம் சகஜம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஏலத்தின்போது வீரர்கள் மாற்றப்படுவர். சமீபத்தில்கூட இவ்வணியில் நீண்டகாலமாக விளையாடிய சஞ்சு சாம்சன் தற்போது சென்னைக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல், மும்பையை எடுத்துக்கொண்டால் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது.
அந்த வகையில், நட்சத்திர வீரர்களை வளைத்துப்போடும் மும்பை இந்தியன்ஸ் அணி விரைவில் சூர்யவன்ஷியை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது ஆவதால் பிசிசிஐ விதிகளின்படி இந்திய சீனியர் அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மேலும், அவர் நீண்டநாட்கள் விளையாட வாய்ப்புள்ளது. தவிர, அவர் தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சதமடித்த வீரராக வலம் வருகிறார். ஆகையால், இந்திய அணியில் அவர் இடம்பிடித்தவுடன், அவரை தங்கள் பக்கம் இழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி இப்போதே காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் 2027 மெகா ஏலத்திலோ அல்லது டிரேடிங் முறையிலோ இந்த மிகப்பெரிய மாற்றம் நிகழலாம் எனச் சொல்லப்படுகிறது.