தாம் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தற்போது யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார்.
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட 14 வயது பாலகனான வைபவ் சூர்யவன்ஷி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அந்த தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளை சூர்யவன்ஷி படைத்தார். இதன்மூலம் ஒரேநாளில் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார். அதுமுதல் அவருக்கு கிரிக்கெட்டில் ஏறுகாலம்தான். ஆம், தாம் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்போது யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார்.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய உலகின் மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான தொடக்கப் போட்டியில் களமிறங்கியபோது, அவருக்கு வெறும் 14 ஆண்டுகள் 294 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. இதன்மூலம் 2010 ஜனவரி 15 அன்று ஜிம்பாப்வேவுக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் கனடாவுக்காக விளையாடிய நிதிஷ் குமாரின் சாதனையை முறியடித்தார். நிதிஷ் குமார் தனது முதல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் விளையாடியபோது 15 ஆண்டுகள் 245 நாட்கள் வயதை எட்டியிருந்தார். தற்போது அதை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்களில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.