சூர்யவன்ஷி - மயங்க் யாதவ் cricinfo
கிரிக்கெட்

15 வயதில் உலகசாதனை படைத்த சூர்யவன்ஷி.. சச்சின் டெண்டுல்கர் சாதனை உடைப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்தில் அரைசதமடித்து அசத்தினார் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

Rishan Vengai

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20யில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் யாதவின் கட்டுப்பாட்டான பந்துவீச்சால் ஜிம்பாப்வே 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 18 பந்தில் அரைசதம் அடித்து இந்தியாவை எளிதில் இலக்கை எட்டச் செய்தார்.

அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி, நேற்று மாலை 4.30 மணிக்கு ஹராரேயில் நடைபெற்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, களமிறங்கினார். மேலும் இந்திய அணியில் மயங்க் யாதவ், அசோக் சர்மா முதலிய புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தியா - ஜிம்பாப்வே

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஜிம்பாப்வே அணி மயங்க் யாதவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரியன் பென்னெட் 0 ரன்னில் வெளியேற, கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்னுக்கே வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.

மயங்க் யாதவ்

126 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்த அவர் 18 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இஷான் கிஷன் 35 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் என அடிக்க 13.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக 4 ஓவரில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூர்யவன்ஷி படைத்த உலகசாதனை..

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 15 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச அரைசதத்தை பதிவுசெய்த வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனையை பதிவுசெய்தார்.

சூர்யவன்ஷி

மிகக்குறைவான வயதில் சர்வதேச அரைசதமடித்த வீரரான சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து வரலாற்றில் தன் பெயரை பொறித்தார் சூரய்வன்ஷி. சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாட்களிலும், ஷாஹித் அப்ரிடி 16 வயது 214 நாட்களிலும் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், சூர்யவன்ஷி 15 வயது மற்றும் 118 நாட்களில் படைத்து சாதனை புரிந்துள்ளார்.