வைபவ் சூர்யவன்ஷி web
கிரிக்கெட்

வைபவா.. சஞ்சு சாம்சனா.. வலுக்கும் போட்டி.. வைரலாகும் மறைமுக பதிவு!

இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வைபவ் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Prakash J

இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற வைபவ், இன்னும் சர்வதேசப் போட்டிகளில் களமிறக்கப்படவில்லை. விரைவில் அவர் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. அதற்கான கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்த நிலையில், இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வைபவ் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூறாவளி எமோஜி போட்டு ’புதிய அத்தியாயம்’ என்று வைபவ் பதிவிட்டு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவது உறுதியாகிவிட்டது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை, இன்றைய ஆட்டத்தில் வைபவ் அறிமுகமானால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர் என்று பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்பு 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இதே தொடரில், தொடக்க ஆட்டக்காரராக இடம்பிடித்திருக்கும் மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை நீக்கிவிட்டு, வைபவ் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், வைபவா, சஞ்சுவா என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜித்தேஸ்வர் புஜாரா, ”இந்திய அணி சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவர் எந்த அழுத்தத்தையும் உணரத் தேவையில்லை. அவரிடம் உள்ள அசத்தலான திறமைக்கு அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவரை நீக்குவது குறித்துப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அணியில் உள்ள முக்கிய வீரர்களை நீக்கக் கூடாது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அல்லது இஷான் கிஷன் ஆகிய டாப்-3 வீரர்களில் யாரையும் நீக்காமல், மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பதன் மூலமாக மட்டுமே வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், “அயர்லாந்து தொடரில் இருந்தே சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது இடத்தை நீக்க வேண்டும் என்று நான் நேரடியாகக் கூறவில்லை, ஆனால் வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர் சிறந்த ஃபார்முடன் வெளியே அமர்ந்திருக்கும்போது அணி நிர்வாகம் சாம்சனின் இடம்குறித்து யோசிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.