2024-2025 பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரில் இந்தியாவை 3-1 என வீழ்த்தி வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, 2014-க்கு பிறகு 10 வருட தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் இழந்தது.
5வது டெஸ்ட் போட்டியில் முதுகுப்பகுதியில் காயமடைந்த பும்ரா, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பந்துவீசவில்லை. அப்படியிருந்தபோதும் கிராக் நிறைந்த பிட்ச்சில் மற்ற இந்திய பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். பும்ரா இல்லாதது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
5 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய பும்ரா 151 ஓவர்கள் வீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வெறும் 13 பவுலிங் சராசரியுடன் 3 முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கும் பும்ரா தொடர் நாயகனாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இறுதி நாளில் காயம் காரணமாக பும்ரா பந்துவீச முடியாதது குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, "எனக்கு கடைசியாகதான் தெரிந்தது. கடைசி நேரத்தில் காயத்தால் பும்ராவால் பந்துவீச முடியாமல் போனது அவமானமானது, ஆனாலும் எங்களுக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இன்று அந்த விக்கெட்டில் அவரை எதிர்கொண்டிருந்தால் எங்களுக்கு முழுமையாக ஒரு கொடுங்கனவாக இருந்திருக்கும். நாங்கள் அவரை மற்ற இந்திய வீரர்களுடன் வெளியே பார்க்காதபோது 'சரி, நமக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நினைத்தோம்” என்று பேசினார்.
பும்ராவின் தனிப்பட்ட குணம் குறித்து பேசிய அவர், “திமிர்பிடித்த ஆனால் அதேநேரம் மிகவும் அன்பான ஒருவரை நான் இதற்குமுன் சந்தித்ததில்லை. அப்படியானவர் பும்ரா. மிகவும் அன்பான குணம் கொண்டவர். திமிர் பிடித்தவராக இருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் அதைச் சொல்வார்" என்று கூறினார்.
டிராவிஸ் ஹெட் பேசுகையில், “இன்று பும்ரா பந்துவீசாமல் போனதில் 15 பேர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், இந்தத்தொடரில் ஒரு விதிவிலக்கான சுற்றுப்பயணத்தைக் கொண்டிருந்தார்” என்று கூறினார்.