தங்கப்பதக்கம் மட்டுமே தகுதி; பிற தோல்விக்குச் சமம்” என ஒலிம்பிக்கில் சாதனை படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் பிறந்தவர் மைக்கேல் பெல்ப்ஸ். நீச்சல் வீரரான இவர், ஃப்ரீஸ்டைல், பட்டாம்பூச்சி மற்றும் தனிநபர் மெட்லி போட்டிகளில் சிறந்து விளங்கினார். அதன் பயனாக ஒலிம்பிக்கில் தனி வரலாறு படைத்தார். சிட்னி 2000 ஒலிம்பிக்கில் அறிமுகமான அவர், ரியோ 2016 வரை ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் தனது குறிப்பிடத்தக்க வாழ்க்கையில், ஏராளமான பதக்கங்களை வென்றார். அதிலும் 2004 ஏதென்ஸில் ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற அவர், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தனது ஆதிக்கத்தை உச்சத்திற்கேகொண்டு சென்றார். ஒரே போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, மார்க் ஸ்பிட்ஸின் நீண்டகால 1972 சாதனையை முறியடித்து விளையாட்டின் வரலாற்றைத் திருத்தி எழுதினார். அடுத்து, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவர், 2016 ரியோவில் ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என ஒலிம்பிக் சரித்திரத்தில் 28 பதக்கங்களைப் பெற்றார். இதில் 23 தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் அடக்கம். ஒலிம்பிக்கைத் தவிர, அவர் 33 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இப்படி ஒலிம்பிக்கில் அமெரிக்கா ஜாம்பவானாக விளங்கும் பெல்ப்ஸ், பாட்காஸ்ட் ஒன்றில் தாம் வாங்கிய தங்கப்பதக்கங்களை மட்டுமே சுட்டிக்காடிப் பேசியுள்ளார். பிறவற்றை தகுதி இல்லை என்றும், அவைகள் தோல்விக்குச் சமமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், “ஒலிம்பிக் போட்டிகளில் எனது 30 பந்தயங்களில் 28இல் பதக்கம் வென்றேன். 23 பந்தயங்களைப் பற்றி (தங்கப்பதக்கம் வென்றது மட்டும் )நாம் பேச வேண்டும். ஏனென்றால் மற்றவற்றில் நான் தயாராக இல்லை. வேறு யாரோ என்னைவிட அதிகமாக தயாராக இருந்தனர். எனக்கு தோற்பது பிடிக்காது. ஆகையால் 2ஆம் இடம் பெற்ற வெள்ளியும் மூன்றாவது இடமும் பெற்ற வெண்கலமும் எனக்குத் தோல்விதான்” என அதில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ’மேடையின் உச்சியில் நிற்பது மட்டுமே உண்மையிலேயே முக்கியமானது’ எனச் சுட்டிக்காட்டும் அவரது மனநிலை எதைக் குறிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.