model image meta ai
கிரிக்கெட்

உ.பி. | மைதானத்தில் நடுவரைத் தாக்கிய தேனீக்கள்.. உயிரிழந்த சோகம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, தேனீக்கள் தாக்கியதில் நடுவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, தேனீக்கள் தாக்கியதில் நடுவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிக்காக கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65) என்பவர் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ​​தேனீக்களின் கூட்டம் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களையும் நடுவர்களையும் தாக்கியது. இதையடுத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் மறைவிடத்தை நோக்கி ஓடினர். எனினும், இந்த தாக்குதலில் மாணிக் குப்தா கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

model image

தேனீக்கள் கொட்டியதில் அவர், மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து, முதலில் அவர் சுக்லகஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் எஸ்.என்.சிங் உறுதிப்படுத்தியுள்ளார். கான்பூரைச் சேர்ந்த நடுவர் மாணிக் குப்தாவைத் தவிர, மற்றொரு நடுவர் மற்றும் 20 வீரர்களையும் தேனீக்கள் தாக்கியதாக அவர் தெரிவித்தார்.