யு19 ஆடவர் உலகக்கோப்பைத் தொடரில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில், அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. இது, பொங்கல் விருந்தாய் ரசிகர்களுக்கு அமைந்தது.
16 அணிகள் கலந்துகொண்ட யு19 ஆடவர் உலகக்கோப்பைப் போட்டி இன்று ஜிம்பாப்வேயில் தொடங்கியது. பிப்ரவரி 7 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில், இன்று நடைபெற்ற தொடக்கப் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அமெரிக்கா அணியை எதிர்கொண்டது. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த அமெரிக்க அணி, 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக நிதிஷ் சுதினி 36 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹெனில் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், மிகவும் எளிதான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்களில் போல்டானார். ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து தருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் ஏமாற்றியது பலருக்கும் வருத்தத்தைத் தந்தது. எனினும் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் வேதந்த் திரிவேதியும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழைக்குப் பிறகு DRS விதிப்படி, இந்திய அணிக்கு 33 ஓவர்களில் 96 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி இடையிடையே விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் வெற்றிபெற்றது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அபிக்யான் குண்டு ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் இந்திய அணி, தன்னுடைய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தைக் கொடுத்துள்ளது.