Two important reason for Indian team lose against englant team in first test match PT
கிரிக்கெட்

இரண்டு மிகப்பெரிய தவறுகள்.. 5 சதங்கள் விளாசியும் இந்திய அணி தோற்க இவைகளே காரணம்!

கடைசி நாள் இந்திய அணிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் முடிந்துவிட்டது. கடைசிவரை போராடிய இந்திய அணிக்கு தோல்வி பரிசாக கிடைத்தது மிகந்த ஏமாற்றம்தான்.

Rajakannan K

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் போட்டியே ஏமாற்றமாக அமைந்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக திகழ்ந்த விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், இளம் படையுடன் சென்ற இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் நிச்சயம் கடினமாக இருக்கும் என்றே பலரும் கணித்தார்கள். லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு கடுமையான சவால் கொடுத்து சிறப்பாகவே விளையாடியது இந்திய அணி.

india test team

ரிஷப் பண்டின் இரண்டு சதங்கள், கில், கே.எல்.ராகுல் போன்றோரின் க்ளாசான பேட்டிங், ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம், பும்ராவின் 5 விக்கெட் என சிறப்பான அம்சங்களுடனே முதல் 4 நாட்கள் நிரம்பி இருந்தது. இரு அணிகளும் கிட்டதட்ட சம பலத்துடனே விளையாடினார்கள். நான்காம் நாள் முடிவில் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாகவே தெரிந்த நிலையில், கடைசி நாள் இந்திய அணிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் முடிந்துவிட்டது. கடைசிவரை போராடிய இந்திய அணிக்கு தோல்விதான் பரிசாக கிடைத்தது.

ரிஷப் பண்ட்

இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை கிரிக்கெட் விமர்சகர்கள் கூறலாம். ஆனால், பிரதானமான இரு காரணங்களை இங்கு பார்க்கலாம்....

1. 'Catches Win Matches' - கோட்டைவிடப்பட்ட கேட்சுகள்!

இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது தொடர்ச்சியாக விடப்பட்ட கேட்சுகள்தான். கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் வேறு எந்த அணியையும் விட அதிகமான கேட்ச்களை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி. 'Catches Win Matches’ என்று சொல்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரே ஒரு விக்கெட் எடுக்கவே மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அப்படியிருக்கையில் கைக்கு வரும் கேட்சுகளை கோட்டைவிடுவது வெற்றிக்கான வாய்ப்பை குறைத்து விடுகிறது. முதல் போட்டியில் ஜடேஜா கூட கேட்ச் விட்டார் என்றால் நம்பவா முடிகிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு கேட்ச் விட்டார். ஆனால், எல்லாவற்றையும் விட ஜெய்ஸ்வால் விட்ட தொடர்ச்சியான கேட்சுகள் தான் இந்திய அணியை சோதித்துவிட்டது.

மீண்டும் மீண்டும் சோதித்த ஜெய்ஸ்வால்..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ஒரே போட்டியில் 3 கேட்ச்களை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஒரே போட்டியில் 4 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட், ஓலி போப் மற்றும் ஹாரி புரூக் 3 பேரின் கேட்ச்களை கோட்டைவிட்டார் ஜெய்ஸ்வால். இரண்டாவது இன்னிங்ஸிலும் டக்கெட்டிற்கு ஒரு கேட்சை கோட்டைவிட்டார். ஜெய்ஸ்வால் விட்ட கேட்சுகள் எந்த அளவிற்கு இந்திய அணிக்கு பாதகமாக மாறியுள்ளது என்பதை கேட்ச்கள் விட்டபின் அவர்கள் எடுத்த ரன்களை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

பென் டக்கெட் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் இருந்தபோது கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். அதன்பிறகு 62 ரன்னில்தான் அவர் ஆட்டமிழந்தார். கிட்டதட்ட 51 ரன்கள் கூடுதலாக அடித்துள்ளார். ஒல்லி போப் 60 ரன்களில் கேட்ச் வாய்ப்பு கொடுத்தநிலையில் கூடுதலாக 46 ரன்கள் சேர்த்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 97 ரன்கள் எடுத்திருந்த போது பென் டக்கெட் கேட்ச் வாய்ப்பு கொடுத்த நிலையில் அதன்பிறகு 52 ரன்கள் சேர்த்தார். அவர் அடித்த 149 ரன்கள்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

2. நல்லாதானே போச்சு.. கடைசியில் ஏன் இப்படி விக்கெட் போகுது..!

இந்திய அணியின் தோல்விக்கு இரண்டாவது முக்கிய காரணம் பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களின் சரிவுதான். முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி மிகவும் வலுவாகவே இருந்தது. மூன்றாவது விக்கெட் 221 ரன்களில் வீழ்ந்த நிலையில் அதன்பிறகு 400 ரன்களை கடந்தும் விக்கெட் விழாமல் சிறப்பாகவே ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. ஜெய்ஸ்வாலை தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் சதம் விளாசி அசத்தினார்கள்.

ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் - பண்ட்

430 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில் 147 ரன்களில் ஆட்டமிழந்ததுதான் தாமதம், 471 ரன்னிற்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் காலி ஆனது. ஆம், வெறும் 41 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கில் மற்றும் பண்ட் களத்தில் ஆடிக் கொண்டிருந்த போது இந்திய அணி நிச்சயம் 600 ரன்களை குவிக்கும் என்றே எதிர்பார்க்கபட்டது. ஏனெனில் அவர்களுக்கு பிறகும் கருண் நாயர், ஜடேஜா, ஷர்துல் என பல வீரர்கள் இருந்தார்கள். ஆனால், கருண் நாயர் டக் அவுட் ஆனார். ஜடேஜா 11 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் 1 ரன்னிலும் நடையைக் கட்டினார்கள். அதன்பிறகு பவுலர்களை சொல்லவே தேவையில்லை.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி இதே தவறைத்தான் செய்தது. 333 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த நிலையில் மீதமுள்ள 6 விக்கெட்டுகளை வெறும் 31 ரன்களில் பறிகொடுத்தது இந்திய அணி. கருண நாயர், ஜடேஜா, ஷர்துல் மூவரும் மீண்டும் சொதப்பினார்கள். அதுவும் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் கூட வீழ்ந்தது. இந்திய அணியின் கடைசி நான்கு பேட்டர்கள் இரு இன்னிங்களையும் சேர்த்து மொத்தமே 9 ரன்களை மட்டுமே எடுத்திருக்கின்றனர். இதற்கு முன்பான இங்கிலாந்து சுற்றுப் பயணங்களின்போது, டெயில் எண்டர் பேட்டர்கள் இந்திய அணிக்கு வலு சேர்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அவர்கள் இதற்கு நேர்மாறாக விளையாடினார்கள். அந்த அணியும் 276 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அதன்பிறகும் கிட்டதட்ட 190 ரன்கள் சேர்த்தார்கள். பின்வரிசையில் இருந்த ஜேமி ஸ்மித் 40, கிறிஸ் வோக்ஸ் 38 மற்றும் பிரைடன் கர்ஸ் 22 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வலு சேர்த்தார்கள்.

ஷுப்மன் கில், பும்ரா

இங்கிலாந்து செய்ததை இந்திய அணி செய்திருந்தால் நிச்சயமாக வெற்றி கைவிட்டு போயிருக்காது. நான்காம் நாள் முடியும் வரை பேட்டிங் செய்து 400 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கூடியிருக்கும் விக்கெட்டுகளும் சரிந்து இருக்கும். கடைசி நாளில் 350 ரன்கள் என்பது மிகச் சரியான இலக்காக அமைந்துவிட்டது.

இந்திய அணியின் தோல்விக்கு பும்ராவின் பந்துவீச்சை மட்டுமே நம்பியிருந்தது. இந்திய அணியின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு எவ்வித அழுத்தையும் கொடுக்கவில்லை. குறிப்பாக ஜடேஜாவின் பந்துவீச்சு மிகச்சுமாராகவே இருந்தது.

பந்துவீச்சை சரியாக சுழற்சி முறையில் கொடுக்காததும் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சிராஜ் இறுதிநாளில் சிறப்பாகவே பந்து வீசினார். ஆனால், 42 முதல் 80 ஆவது ஓவர் வரையில் அவருக்கு பந்துவீச வாய்ப்பே கொடுக்கவில்லை. பீல்டிங் வேறு சொதப்பல் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி பல நேரங்களில் கில்லை விட ரிஷப் பந்தும், கே.எல்.ராகுலுமே அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் நாட்டு மைதானத்தை அழகாக பயன்படுத்தி விக்கெட் விழாமல் இங்கிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங் செய்தது.