ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு WTC சாம்பியனான ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி பிங்க்பால் ஆட்டமாக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக யுத்தம் நடத்திவருகின்றன.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, இந்தியா 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்தால் 337 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணிக்கு எப்போதும் பெரும் தலைவலியாக வந்து நிற்கும் டிராவிஸ் ஹெட் இந்தபோட்டியிலும் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். ஒருநாள் போட்டியை போல 100 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய டிராவிஸ் ஹெட் எந்த இந்திய பவுலர்களையும் செட்டில் ஆக விடாமல் பவுண்டரிகளாக விரட்டி நம்பிக்கையை தகர்த்தார்.
ஒருமுனையில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட்டாகி வெளியேறினாலும், மறுமுனையில் திடமாக நிலைத்து நின்று வெளுத்துவாங்கிய ஹெட் 141 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 140 ரன்கள் அடித்து சிராஜ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஹெட் 140 ரன்கள், லபுசனே 64 ரன்கள் என அசத்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலையுடன் 337 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி 39 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. கே.எல்.ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.