transgender cricketer web
கிரிக்கெட்

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் Transgender வீரர்கள் விளையாட தடை! ICC-ன் புதிய பாலின தகுதி விதிமுறை!

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் ஆணாக பிறந்து மாறிய எந்த வீரர்களுக்கும் இடம் இல்லை என்ற புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

Rishan Vengai

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு அகமதாபாத்தில் நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் பல கிரிக்கெட் விதிமுறை குறித்த மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 3 முறை ஓவர்களுக்கு இடையேயான நேரம் தாமதிக்கப்பட்டல் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும், இரண்டு பாலின அம்பயர்களுக்கும் ஒரே விதமான ஊதியம், ஆடுகளங்களை மாற்றுவதற்கான கிரிட்டீரியா மற்றும் பாலின தகுதி விதிமுறை போன்ற விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Danielle McGahey

இந்த விதிமுறை மாற்றத்தில் பாலின தகுதி விதிமுறை மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க முடியாத கட்டுப்பாடு என்பது பலபேரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் டேனியல் மெக்கஹே என்ற 29 வயதான மூன்றாம் பாலின வீரர் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்றார். கனடாவிற்காக பங்கேற்ற இவரின் கிரிக்கெட் பயணம் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எதற்காக மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க கூடாது? ஐசிசி சொன்ன காரணம்?

பாலின தகுதி விதிமுறையின் படி, ஆணாக பிறந்து அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய எந்த ஒரு வீரருக்கும் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணங்களாக, சர்வதேச பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவதாக அறிவித்துள்ளது.