Danielle McGahey
Danielle McGahey web
கிரிக்கெட்

“எங்களுக்கும் கிரிக்கெட் விளையாட உரிமை உள்ளது”- ICC முடிவை அடுத்து திருநங்கை கிரிக்கெட் வீரர் ஓய்வு!

Rishan Vengai

செவ்வாய் கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் பல கிரிக்கெட் விதிமுறை மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி பந்துவீசுவதற்கு பவுலர்கள் அதிகநேரம் தாமதம் செய்தால் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும், இரண்டு பாலின அம்பயர்களுக்கும் ஒரே ஊதியம், பிட்ச்சின் தன்மையை மாற்றுவதற்கான கிரிட்டீரியா மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் பாலின தகுதி போன்ற பல விதிமுறைகள் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று ஐசிசி அறிவித்த மாற்றங்களில் பெண்கள் கிரிக்கெட்டில் பாலின தகுதி விதிமுறை என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐசிசி அறிவிப்பின் படி, ஆணாக பிறந்த ஒருவர் பருவ மாற்றத்தின் மூலமோ அல்லது அறுவை சிகிச்சையின் மூலமோ பெண்ணாக மாறியவர்களுக்கு பெண்கள் பிரிவில் விளையாட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காரணமாக, பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை தெரிவித்துள்ளது.

ஐசிசி அறிவிப்பை தொடர்ந்து ஓய்வை அறிவித்த முதல் திருநங்கை வீரர்!

ஐசிசியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்ற கனடாவை சேர்ந்த முதல் திருநங்கை வீரரான டேனியல் மெக்கஹே தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான டேனியல் கடந்த 2020-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தொடர்ந்து 2021-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார். இந்நிலையில் கனடாவிற்காக கிரிக்கெட் விளையாடிய டேனியல், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் கனடாவுக்காக விளையாடினார். பெண்கள் டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு 2024-ல் நடைபெறவிருக்கிறது.

cricket gender rules

இந்நிலையில் தான் ஐசிசியின் பாலின தகுதி அறிவிப்பை தொடர்ந்து தன்னுடைய கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “ ஐசிசியின் பாலின தகுதி முடிவைத் தொடர்ந்து, எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை கனத்த இதயத்துடன் நான் கூறுகிறேன். என் கனவுப் பயணம் தொடங்கிய சிறிது காலங்களில், முடிவுக்கு வந்துவிட்டது” என எமோசலானக பதிவிட்டுள்ளார்.

Danielle McGahey

மேலும், ”ஐசிசியின் இந்த முடிவை பொறுத்தவரையில் நான் பொருத்தமற்றது என்று நினைக்கிறேன். இன்று மில்லியன் கணக்கிலான திருநங்கைகளுக்கு கிரிக்கெட் சொந்தமில்லை என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளது. நான் இன்று ஒன்றை உறுதியளிக்கிறேன், கிரிக்கெட் விளையாட்டில் எங்களுடைய சமத்துவத்திற்காக போராடுவதை நான் நிறுத்த மாட்டேன். நாங்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கான உரிமைக்கு தகுதியானவர்கள். இந்த மட்டத்தில், நாங்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. எங்களுக்கான உரிமைக்கான யுத்தத்தை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை” என்று உணர்ச்சி பெருக்கோடும் கூறியுள்ளார்.

டேனியல் மெக்கஹே 6 டி20 போட்டிகளில் விளையாடி 19.66 சராசரி மற்றும் 95.93 ஸ்ட்ரைக் ரேட்டில் 118 ரன்கள் அடித்துள்ளார்.