KL Rahul | Bas de Leede  | rachin Ravindra | Aiden Markram | Kusal Mendis
KL Rahul | Bas de Leede | rachin Ravindra | Aiden Markram | Kusal Mendis PTI
கிரிக்கெட்

Cricket World Cup | முதல் போட்டியில் கவனம் ஈர்த்த 5 வீரர்கள்..!

Viyan

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. 5 போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பல வீரர்கள் உலகக் கோப்பை மேடையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்த டாப் 5 பெர்ஃபாமர்கள் இங்கே.

பாஸ் டி லீட் - நெதர்லாந்து

Bas de Leede

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முழுமையான ஒரு ஆல் ரவுண்ட் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார் பாஸ் டி லீட். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்கத்தில் தடுமாறினாலும் மிடில் ஓவர்களில் நல்ல கம்பேக் கொடுத்தது. 38-3 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல் இருவரும் 120 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதை உடைத்தது டி லீட் தான். அதுமட்டுமல்லாமல், அதன்பிறகு பெரிய பார்ட்னர்ஷிப்கள் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டார். இஃப்திகர் அஹமது, ஷதாப் கான் போன்ற பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர், 4 விக்கெட்டுகளோடு முடித்தார். அடுத்ததாக பேட்டிங்கில் இறங்கியவர் மிடில் ஓவர்களில் தனி ஆளாகப் போராடி 68 ரன்கள் விளாசினார். தரமான பாகிஸ்தான் பௌலிங்குக்கு எதிராக 98.52 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அசராமல் அடுத்து ஆடினார். 2019 உலகக் கோப்பை எப்படி ஷகிப் அல் ஹசனுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததோ அதுபோல் இத்தொடர் டி லீடுக்கு அமையலாம்.

ரச்சின் ரவீந்திரா - நியூசிலாந்து

rachin Ravindra

கேன் வில்லியம்சன் இல்லாததால் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரவீந்திரா, உலக சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடினார். தன் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார். ஒரு பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது எந்த வித பற்றமும் இல்லாமல் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார் ரவீந்திரா. ஒவ்வொரு பௌலரையும் டார்கெட் செய்த அவர் கான்வேவுடன் இணைந்து 273 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 11 ஃபோர்கள், 5 சிக்ஸர்களின் உதவியுடன் 123 ரன்கள் (96 பந்துகளில்) விளாசினார் அவர். முன்னதாக பந்துவீச்சிலும் கைகொடுத்த ரவீந்திரா அதிரடி வீரர் ஹேரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் வந்தாலும் தனக்கு இடம் இருக்கவேண்டும் என்று தன் செயல்பாட்டின் மூலம் சொல்லியிருக்கிறார் இந்த இந்திய வம்சாவளி வீரர்.

எய்டன் மார்க்ரம் - தென்னாப்பிரிக்கா

Aiden Markram

உலகக் கோப்பை அரங்கின் அதிவேக சதத்தை அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் எய்டன் மார்க்ரம். குவின்டன் டி காக், ரஸி வேன் டெர் டுசன் இருவரும் அதிரடியாக ஆடி சதமடிக்க, 'இதெல்லாம் என்ன அதிரடி. நான் காட்றேன் பாரு சரவெடி' என்பதுபோல் மிரட்டியெடுத்தார் அவர். கிளாசன், மில்லர் போன்றவர்கள் அதிரடி காட்டுவார்கள் என்று நினைத்திருந்தவர்களுக்கு இவர் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவரது அடியால் இலங்கை பௌலர்கள் ஒட்டுமொத்தமாக மிரண்டு போனார்கள். 34 பந்துகளில் அரைசதம் கடந்தவர், அடுத்த 15 பந்துகளில் சதமடித்தார். அதன்மூலம் கெவின் ஓ பிரயன் வைத்திருந்த 12 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் அவர். மிகப் பெரிய ஸ்கோர் என்பதால் அவர் பந்துவீசவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இனிவரும் போட்டிகளில் அந்த டிபார்ட்மென்டிலும் கைகொடுப்பார் மார்க்ரம்.

குசல் மெண்டிஸ் - இலங்கை

Kusal Mendis

மாபெரும் இலக்கை (428 ரன்கள்) சேஸ் செய்த இலங்கை அணி 1 ரன் எடுத்திருந்தபோதே ஓப்பனர் நிசன்காவை பூஜ்யத்துக்கு இழந்தது. அதன்பிறகு வெறிகொண்ட வேங்கையாக களம் கண்டார் குசல் மெண்டிஸ். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கிய அவர் சிக்ஸரும், ஃபோருமாகப் பறக்கவிட்டார். மற்றொரு ஓப்பனர் குசல் பெரேரா முதல் ரன்னை எடுக்கும் முன்பே அரைசதம் கடந்தார் குசல் மெண்டிஸ். ஆம், உண்மையாகத்தான்! அந்த அளவுக்கு வெறித்தனமாக ஆடினார். ரபாடா, எங்கிடி, யான்சன் என அனைவரின் பந்துகளும் எல்லையைக் கடந்து விழுந்துகொண்டிருந்தன. 10 ஓவர்கள் முடியும் முன்பே 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அவர் களத்தில் இருந்தால் இலங்கை இலக்கை நெருங்கிவிடுமோ என்று நினைக்குமளவுக்கு இருந்தது அவரது உடல்மொழி. ஆனாலும் 13வது ஓவரிலேயே 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார் மெண்டிஸ். நிச்சயம் இந்த உலகக் கோப்பையின் மிரட்டலான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இந்த இன்னிங்ஸ் அமையும்.

கேஎல் ராகுல் - இந்தியா

KL Rahul

மிகவும் கடினமான நிலையில் உள்ளே புகுந்து தன் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் கே.எல்.ராகுல். 200 என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 2 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்துவிடும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். போட்டி கையை விட்டுப் போய்விடுமோ என்று பயந்த நிலையில், விராட் கோலியோடு இணைந்து ஒரு அற்புதமான கூட்டணியை உருவாக்கினார் ராகுல். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து மிகவும் நிதானமாக, பொறுப்பாக ஆடினார் அவர். தவறான ஒருசில பந்துகளை மட்டுமே தண்டித்து மிகச் சிறப்பாக தன் இன்னிங்ஸைக் கட்டமைத்தார். கோலி கூட ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வாய்ப்பைப் பரிசளித்தார். ஆனால் ராகுல் முழு கட்டுப்பாடோடு விளையாடினார் அவர். கோலி அவுட் ஆகியிருந்தாலும் முழுமையாக களத்தில் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்கிறார் ராகுல். இந்தியாவுக்கு மிகமுக்கிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் அவர்.