சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளை சேர்ந்த, முன்னாள் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
தங்களுடைய குழந்தைப்பருவ மற்றும் இளமைப்பருவ கிரிக்கெட் ஹீரோக்களை பார்க்க மைதானத்தில் குவிந்த ரசிகர்கள், எதிர்ப்பார்க்காத ஒரு வரவேற்பை கொடுத்து மிரட்டிவிட்டனர்.
அந்தவகையில் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை பார்க்க மைதானத்தில் குவிந்த ரசிகர்களிடம், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய பின் தென்னாப்பிரிக்கா பவுலர் ஷபலால மன்னிப்பு கேட்டார். எளிமையான முறையில் பந்துவீசிய அவரே கேட்ச்பிடித்து சச்சினை வெளியேற்றிய பிறகு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்த ஆல்டைம் சிறந்த ஃபீல்டரான தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ், பவுண்டரி லைனுக்கு வேகமாக பறந்த பந்தை சிறப்பான முறையில் டைவ் அடித்து தடுத்து நிறுத்தினார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் 55 வயதில் இன்னும் ‘ஃபீல்டிங்கில் கிங்’ என நிரூபித்த ஜாண்டி ரோட்ஸை பாராட்டி கொண்டாடினர்.
இலங்கையின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் சங்கக்கரா தன்னுடைய திறமையை மீண்டும் ஒருமுறை பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் வெளிப்படுத்தினார்.
தொடர் முழுவதும் 38 பவுண்டரிகளை விளாசிய குமார் சங்கக்கரா, இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 106* ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுமட்டுமில்லாமல் 47 வயதிலும் விக்கெட் கீப்பிங்கில் சில அசாத்தியமான ஸ்டாப்களை நிகழ்த்திகாட்டிய அவர் ஏன் சிறந்தவர் என்பதை நிரூபித்து காட்டினார்.
தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்தியா மாஸ்டர்ஸ் அணி. ஆனால் 4வது லீக் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் ஷேன் வாட்சன், பென் டங் இருவரும் மாறி மாறி சதங்கள் அடித்து 269 ரன்கள் என்ற மிகப்பெரிய டோட்டலை குவித்தனர்.
அந்தப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது, அதில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. அதில் பங்கேற்ற யுவராஜ் சிங், நாக்அவுட்ல ஆஸ்திரேலியாவா நான் இருக்கேன் என்று 7 சிக்சர்களை விளாசி 30 பந்தில் 59 ரன்கள் குவித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார்.
யுவராஜ் சிங்கின் இந்த ஆட்டத்தை 2007 டி20 உலகக்கோப்பை அரையிறுதி (vs ஆஸ்திரேலியா), 2011 ஒருநாள் உலகக்கோப்பை காலிறுதி (vs ஆஸ்திரேலியா) இரண்டிலும் ஆட்டநாயகனாக விளங்கிய பழைய போட்டியுடன் ஒப்பிட்டு சிலாகித்தனர்.
லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் சில தரமான கிரிக்கெட் ஷாட்களை எடுத்துவந்தார்.
அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சிக்சராக கருதப்படும் இங்கிலாந்து பவுலர் ஆண்டி கேரிக்கிற்கு எதிரான சிக்சர், விராட் கோலியின் சிறந்த ஷாட் என கருதப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான 2022 டி20 உலகக்கோப்பை ஷாட், அப்பர் கட், கிளாசிக்கல் டிரைவ், கட் ஷாட், ஸ்கூப் புல் ஷாட் என அனைத்து கிரிக்கெட் ஷாட்களையும் மீண்டும் நிகழ்த்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். இன்னும் இவருக்கு வயசாகல பா என மிரட்சியாகும் அளவு சிறந்த கிரிக்கெட் தருணங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.