பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கும் ஒரு அசுரத்தனமான பேட்ஸ்மேனை இந்திய கிரிக்கெட் கண்டறிந்த நாள் இன்று.
நீண்ட சடையுடன், திடமான தோள்களுடன், கைகளில் எப்போதும் விக்கெட் கீப்பிங் கிளவ்ஸ் உடன் இருக்கும் வீரரிடம் சென்று, எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது எந்த இடத்தில் வேண்டுமானாலும் என்னால் ரன்களை அடிக்க முடியும் என்று சொன்ன இளம்வீரரை கண்டு பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைய தான் செய்தார்கள்.
தன் திறமை மீதான நம்பிக்கை அந்த இளம்வீரனுக்கு அதிகமாகவே இருந்தது, ஒருவேளை வாய்ப்பு கிடைப்பதற்காக சொல்கிறான் என்று நினைத்த பலபேரையும் பந்துகளை வந்தவேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் பெவிலியனுக்கு பறக்கவிடும் திறமையை பார்த்து இந்த பையன்கிட்ட என்னவோ இருக்குபா என்று உணர்ந்தவர்தான் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி.
2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதியான இதேநாளில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 7வது வீரராக தன் முதல் போட்டியில் களமிறங்கிய எம்எஸ் தோனி முதல் போட்டியிலேயே 0 ரன்னில் வெளியேறினார். அதற்கு அடுத்த போட்டிகளிலும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் தோனியின் மீது கங்குலிக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது.
சரியான வீரனை சரியான இடத்தில் களமிறக்கவேண்டும் என்று நினைத்த சவுரவ் கங்குலி, பாகிஸ்தானுக்கு எதிராக திறமையான பவுலர்களுக்கு எதிராக தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுத்து நம்பர் 3 இடத்தில் தோனியை களமிறக்கினார். அந்த போட்டியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக நிலைத்து நின்று ஆடிய தோனி 123 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்குபிறகு தோனி என்ற பெயர் சர்வதேச கிரிக்கெட்டில் அழிக்க முடியாத பெயராக மாறியது.
“Dhoni finishes off in style, A magnificent strike into the crowd, India lifts the World Cup after 28 years" என டெலிவிஷனில் ஒலித்த ரவி சாஸ்திரியின் குரலும், தோனியின் அந்த வின்னிங் சிக்சரும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதிற்குள்ளும் இன்றளவும் மறக்க முடியாத ஒரு பொக்கிஷமாக இருந்துவருகிறது.
1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்றதற்குபிறகு 28 வருடங்கள் இந்தியா காத்திருக்க வேண்டியிருந்தது. தோனி என்ற ஒரு வீரன் வருவான், அவன் அணியின் கடினமான நேரத்தில் கேப்டனாக பொறுப்பேற்று, அணியின் நன்மைக்காக சில கடுமையான முடிவுகளை எடுத்து, சில கெட்ட பெயர்களையும் தன்மீது சேர்த்துக்கொண்டார்.
ஆனால் எல்லாம் கோப்பையை வெல்லும் ஒரே லட்சியத்திற்காக உதறித்தள்ளிய தோனி, தன் திட்டத்திற்கான ஒரு வலுவான அணியோடு 2011 உலகக்கோப்பைக்குள் நுழைந்தார். தோனி தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குபிறகு உலகக்கோப்பை வென்று மகுடம் சூடியது.
இந்தியா கோப்பையே வெல்லாதா என்று ஏங்கி தவித்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேப்டன் ஒரு இந்தியன் என்ற கூற்றை உலக கிரிக்கெட்டர்களும் ஏற்றுக்கொள்ள செய்த தோனி இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்..