தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அரசு பணிக்காக ஆணைகளை வழங்கியுள்ளார். செஸ் வீராங்கனை வைஷாலியை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் இளநிலை அலுவலராக நியமித்து, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். கால்பந்து வீராங்கனை சுமித்ராவை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளராக நியமித்தும், கூடைப்பந்து வீராங்கனை சத்யாவை, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகியாக நியமித்தும், முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பாய்மர படகு போட்டி வீரர் சித்ரேஷ் தத்தாவிற்கு, சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 13 நபர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி 2வது இடமும், நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கால்பந்து வீராங்கனை கே.சுமித்ரா முதல் இடமும், நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கூடைப்பந்து வீராங்கனை எஸ்.சத்யா முதல் இடமும் பிடித்திருந்தனர். சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகுப் போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தா பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.