2025 சாம்பியன்ஸ் டிராபியை தலைமையேற்று நடத்திய பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து முதல் அணியாக பரிதாபமாக வெளியேறியது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடித்த கையோடு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
முதல் டி20 போட்டியில் 91 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. மழையால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. சல்மான் ஆகா 46 ரன்களூம், சதாம் கான் 26 ரன்களும் அடிக்க 15 ஓவரில் 135 ரன்களை அடித்தது பாகிஸ்தான்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம்கண்ட நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர்களாக டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் ஆலன் இருவரும் தலா 5 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய முகமது அலி ஓவரில் 3 சிக்சர்களை பின் ஆலன் பறக்கவிட, 3வது ஓவரை வீசிய ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார் டிம் சீஃபர்ட்.
சீஃபர்ட் 45 ரன்கள், ஆலன் 38 ரன்கள் எடுத்து அசத்த 13.1 ஓவரில் இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலைபெற்றுள்ளது நியூசிலாந்து அணி.