கன்னியாகுமரி தென் தாமரைக்குளம் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது மர்மமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் 19 இடங்களில் காயங்கள், கை முறிவு, கட்டிப்போட்டு தாக்கிய அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் வெளிவந்ததால், சிறை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 9ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, 35 வயதான சபரிவர்மன் என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்தசூழலில் சிறையில் இருந்த சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாகர்கோவில் குற்றவியல் நீதிபதி சத்யநாராயணன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், சபரிவர்மனை காவல்துறைனர் அடித்து கொலை செய்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவலில், நாகர்கோவில் சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் மற்றும் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது. மேலும் தலை, பின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்று தனது கணவர் அடித்துக் கொலை என சபரிவர்மன் மனைவி புகார் அளித்திருந்த நிலையில், சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில் சிறை வார்டன் உட்பட சிறைக் காவலர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரண வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பிரிவு 103 மற்றும் 167 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நேசமணிநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் திருவிடைநம்பி, இரண்டாம் நிலை காவலர்கள் சிவகுமார் மற்றும் ஜெகன் ஆகிய மூன்று பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் மூவரையும் சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி மத்திய சிறைச்சாலை எஸ்பி செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சபரி வர்மனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தனது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சபரிவர்மன் மனைவிக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே உடலை வாங்கிச் செல்வதாக உறவினர்கள் கூறியதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.