Robinson-Ricky Ponting
Robinson-Ricky Ponting Twitter
கிரிக்கெட்

“மிக மோசமான வார்த்தைகள் அவை; இதற்காக அவர் வெட்கப்படணும்” - ராபின்சன் மீது முன்னாள் வீரர்கள் காட்டம்!

Rishan Vengai

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் ஆஷஸ் தொடரின் முதல்போட்டியானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான ஒன்றாக இருந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல்நாளிலேயே 393 ரன்கள் குவித்து இன்னிங்ஸை டிக்ளார் செய்து இந்த போட்டியை விறுவிறுப்பாக மாற்றியது. ஆனால் இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் எண்ணத்தை உடைத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

67 ரன்னுக்கு 3 விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்ற கவாஜா சதத்தை பதிவு செய்து தனியாளாக இன்னிங்ஸை தாங்கி எடுத்துவந்தார். 2ஆவது நாளில் முழுமையாக பேட்டிங் செய்த கவாஜா 3-வது நாளிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒருவேளை கவாஜாவின் விக்கெட்டை இங்கிலாந்து எடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு சாதகமாக இந்த போட்டி மாறியிருக்கும். கவாஜாவின் விக்கெட்டை தேடிய இங்கிலாந்து அணிக்கு 113-வது ஓவரை வீச வந்த ராபின்சன், அவரை 141 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றி அசத்தினார். கவாஜா அவுட்டான நிலையில் வெறும் 14 ரன்களில் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்து. அந்தளவு இங்கிலாந்துக்கு பெரிய தடையாக விளங்கினார் கவாஜா.

அசிங்கமான வார்த்தை கூறி கவாஜாவை வெளியேற்றிய ராபின்சன்!

முதல் ஹோம் ஆஷஸ் தொடரில் விளையாடும் ராபின்சன், 20 ஓவர்களை கடந்தும் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்துவந்தார். இந்நிலையில் நீண்ட விக்கெட் தேடலுக்கு பிறகு முக்கியமான கவாஜா விக்கெட்டை வீழ்த்திய அவர், உணர்ச்சி பெருக்கில் மோசமான சில வார்த்தைகளை உதிர்த்தார். ராபின்சனின் இந்த அணுகுமுறையை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

வர்ணனையாளர் ஆடம் காலின்ஸ், “கவாஜாவின் விக்கெட்டை எடுத்துவிட்டு ஒடிவரும் ராபின்சன், நம்பமுடியாத சில விரும்பத்தகாத வார்த்தைகளைக் கூறுகிறார். இது மிகமோசமான ஒரு செயலாகும். இந்த இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதைக்கு அப்பாற்பட்டது" என்று காலின்ஸ் கூறினார்.

மேலும் “கவாஜா பெவிலியன் திரும்பிய போது ஒல்லி ராபின்சன் நேற்று சில மிதமிஞ்சிய மொழியைப் பயன்படுத்தியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது எந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் செய்யாத ஒன்று. அதை தாண்டி யாரிடமும் அதிகமாக பேசாத இனிமையான நாக்கை உடைய ஒரு நபருக்கு எதிராக இத்தகைய வார்த்தைகளை கூறி புண்படுத்தியதற்காக ராபின்சன் வெட்கப்பட வேண்டும்” என்று இங்கிலாந்து ஜர்னலிஸ்ட் ஒருவர் பதிவிட்டுள்ளார். என்னதான் பலர் ராபின்சனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அது எப்படி பார்க்கப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை!- ரிக்கிபாண்டிங் இதை முன்பே செய்துள்ளார்!

கவாஜாவை மோசமாக வெளியேற்றியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் ராபின்சன், “அப்படி பேசியது பொருத்தமானது இல்லை தான். ஆனால் ஆஷஸ் போன்ற ஒரு தொடரில் நீங்கள் விளையாடும் போது, அதிகமான வெப்பத்தில் இதை போன்று நடப்பதெல்லாம் இயல்பானது என்று நான் நினைக்கிறேன். இது எனது முதல் ஹோம் ஆஷஸ் தொடர் மற்றும் அணிக்கு தேவையான முக்கியமான நேரத்தில் பெரிய விக்கெட்டைப் பெறுவது எனக்கு ஸ்பெஷல்” என்று அவர் கூறினார்.

Robinson - Ricky Ponting

மேலும் இதுபோன்ற அணுகுமுறையை ரிக்கி பாண்டிங்கும், பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் எங்களுக்கு செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டிய அவர், “ நீங்கள் கடந்த ஆஷஸ் தொடர்களை பார்க்கும் போது ரிக்கி பாண்டிங் முதலிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களிடமும் அவ்வாறே செய்துள்ளனர். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய அந்த செயல் எப்படி உணரப்படுகிறது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இது ஆஷஸ். இது ஒரு தொழில்முறை விளையாட்டு. உங்களால் இதைக் கூட கையாள முடியாவிட்டால், வேறு எதை கையாள முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

Nasser Hussain - Robinson

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரிக்கி பாண்டிங், ”15 ஆண்டுகளாக நான் எந்த இங்கிலிஸ் வீரர்களையும் ஸ்லெட்ஜுங் செய்ததில்லை, அவருக்கு நீண்ட நினைவாற்றல் இருக்க வேண்டும்” என்றும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், “ராபின்சன் அதே அணுகுமுறையை அவர் பேட்டிங் செய்யும் போது அனுபவிப்பார்” என்றும் தெரிவித்துள்ளனர்.