இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருவாண்டா வீரரை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையை படைத்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கிறது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், சிறிய அணிகள் எப்படி விளையாடப்போகின்றன, எதாவது பெரிய அப்செட் நிகழுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இன்று கொழும்புவில் நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிவருகின்றன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, கமிந்து மெண்டீஸின் 19 பந்தில் 44 ரன்கள் ஆட்டத்தால் 163 ரன்கள் சேர்த்தது. இதில் பேட்டிங் செய்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற படுமோசமான சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டு வீரர் ஜாப்பி பிமென்யிமானா 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்த நிலையில், தசுன் ஷனகா 16 முறை டக் அவுட்டாகி பின்னுக்கு தள்ளினார்.