2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடும் பரபரப்பு நிலவுகிறது. ஆர்சிபி, குஜராத், ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன. மும்பை, லக்னோ, சென்னை வெளியேறிய நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், கேகேஆர், டெல்லி அணிகள் மோதுகின்றன. டாப் 2 இடத்திற்காக ஆர்சிபி, SRH அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2026 ஐபிஎல் தொடரானது புள்ளிப்பட்டியலில் ஒரு பரமபத ஆட்டத்தையே கண்டுவருகிறது. டாப் 4 பட்டியலில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற குளறுபடியானது கடைசிவரை திகில் கிளப்பிய நிலையில், ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் முதலிய 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ போன்ற அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், கடைசி 3 போட்டியிலும் தோல்வியுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் குஜராத்திடம் படுதோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மீதமிருக்கும் 1 இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் டாப் 2 இடங்களில் இடம்பெறுவதற்கான போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 9 போட்டிகளில் வென்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆர்சிபி +1.065 NRR உடன் இருக்கிறது. அதேபோல 8 போட்டிகளில் வென்றிருக்கும் SRH 16 புள்ளிகளுடன் +0.350 NRR உடன் நீடிக்கிறது.
இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் சன்ரைசர்ஸ் அணி ஆர்சிபியை தோற்கடித்தால் SRH முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு குவாலிஃபையர் 1 மற்றும் 2 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.