sachin - dhoni
sachin - dhoni X
கிரிக்கெட்

No.7 ஜெர்சிக்கு ஓய்வு? சச்சினை தொடர்ந்து தோனியை கௌரவிக்கும் பிசிசிஐ! குஷியில் ரசிகர்கள்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தோனியின் தலைமையில் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என மூன்று உலகக்கோப்பைகளையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் 146 வருட உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தனி வரலாறு படைத்து தோனி இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

dhoni

இந்நிலையில்தான், இந்திய அணிக்கு தோனி செய்திருக்கும் செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக, அவர் அணிந்த நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஓய்வு அறிவிக்கும் பட்சத்தில் இதுவரை நம்பர் 7 ஜெர்சியை பயன்படுத்திய வீரர்கள் இதற்குமேல் பயன்படுத்தமுடியாது. அதேபோல் இதற்கு மேலும் எந்த வீரருக்கும் நம்பர் 7 ஜெர்சி வழங்கப்படாது.

சச்சினின் நம்பர் 10 ஜெர்சி to தோனியின் நம்பர் 7 ஜெர்சி!

கடந்த 2017ஆம் ஆண்டு சச்சின் பயன்படுத்திய நம்பர் 10 கொண்ட ஜெர்சிக்கு ஓய்வளித்து பிசிசிஐ அறிவித்தது. அதற்கு பிறகு சச்சின் பயன்படுத்திய நம்பர் 10 ஜெர்சியை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் நம்பர் 10 ஜெர்சியை ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய நிலையில், 2017ஆம் ஆண்டு அறிவிப்பிற்கு பிறகு சச்சினை கௌரவிக்கும் வகையில் நம்பர் 10-ஐ பயன்படுத்தாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் சச்சினை தொடர்ந்து தோனிக்கும் இத்தகைய கௌரவத்தை அளிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

dhoni

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், “இளம் வீரர்கள் மற்றும் தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் என யாரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை எடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு தோனி அளித்த விளையாட்டுப் பங்களிப்பிற்காக, அவர் அணிந்த 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. அதன்படி இனிவரும் புதிய வீரர்கள் யாரும் 7 எண்ணை பெற முடியாது. சச்சினின் நம்பர் 10 ஏற்கனவே ஒய்வளிக்கப்பட்ட நிலையில், தற்போது நம்பர் 7-ம் ஓய்வளிக்கப்படுகிறது" என்று தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோள் காட்டியுள்ளது.