வருண் சக்கரவர்த்தி PT
கிரிக்கெட்

உலகையே மிரட்டும் மிஸ்ட்ரி ஸ்பின்னர்.. 33 வயதில் போராடி வென்ற தமிழன்! யார் இந்த வருண் சக்கரவர்த்தி?

கனா திரைப்படத்தில் ‘நான் அவர ஒதுக்கி வைக்கல, பதுக்கி வச்சிருந்தன்’ என்பதான வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதைப்போலவே வருண் சக்கரவர்த்தியை இதற்குமுன் எதிர்கொள்ளாத நியூசிலாந்துக்கு எதிராக களமிறக்கிய கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் வேட்டை நடத்தினார்.

Rishan Vengai

26 வயதில் கிரிக்கெட்டை கனவாக எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்கிய ஒரு இளைஞன், தன்னுடைய விடாமுயற்சியால் உலகமே திரும்பிப்பார்க்கும் மர்மமான சுழற்பந்துவீச்சில் தன்னை மெருகேற்றிக்கொண்டு 33 வயதில் வென்று காட்டியுள்ளார்.

50 ஆண்டுகால இந்திய கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அறிமுகமான வயதான வீரராக 33 வயதில் Debut செய்திருக்கும் வருண் சக்கரவர்த்தி, பும்ரா போன்ற தலைசிறந்த பவுலருக்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

யார் இந்த வருண் சக்கரவர்த்தி?

மிஸ்ட்ரி ஸ்பின்னர் – மர்மமான சுழற்பந்துவீச்சும், அதை கையாளும் சுழற்பந்துவீச்சாளர்களும் உலக கிரிக்கெட்டில் எப்போதும் பிரகாசித்துள்ளனர். அவர்களை எதிர்கொள்வது என்பது பேட்மேன்ஸ்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பணம் தான்.

உலக கிரிக்கெட்டானது பிஎஸ் சந்திரசேகர், சக்லைன் முஸ்டாக், அஜந்தா மெண்டீஸ், சுனில் நரைன் போன்ற தலைசிறந்த மிஸ்ட்ரி ஸ்பின்னர்களை கண்டுள்ளது. அந்தவரிசையில் மர்மமான ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியும் தன் பெயரை மாற்றும் முயற்சியில் இணைந்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி

1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பிடார் என்னும் இடத்தில் பிறந்த வருண் சக்கரவர்த்தி, சென்னை அடையாறில்தான் தன் குழந்தைபருவம், பள்ளி, கல்லூரிபடிப்பு என அனைத்தையும் முடித்தார்.

சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் செயிண்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், பள்ளியில் விக்கெட் கீப்பராகவே விளையாடியுள்ளார். ஆனால் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திய அவர், பின்னர் SRM பல்கலைக்கழகத்தில் கட்டுமானவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

26 வயதில் தொடங்கிய கிரிக்கெட் பயணம்..

மீண்டும் 26 வயதில் கிரிக்கெட் மீதான கனவு புத்துயிர்பெற, தான் பார்த்துக்கொண்டிருந்த Architecht வேலையை விட்டுவிட்டு, ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாறவேண்டும் என்ற கனவோடு புறப்பட்டார் வருண் சக்கரவர்த்தி. ஆனால் 2017-ல் அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயமானது அவரை வேகப்பந்துவீச்சாளர் என்பதிலிருந்து மாற்றி சுழற்பந்துவீச்சாளராக மாறுவதற்கு வழிவகுத்தது.

13 வயதில் டென்னிஸ் பால் கிரிக்கெட், பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், அதற்குபிறகு கட்டுமானவியல் வேலை, மீண்டும் வேகப்பந்துவீச்சாளராகும் கனவு என பல பாதைகளை கண்ட அவருடைய பயணம், இந்தியாவிற்கு தேவையான ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னராக உருவாக்கி அனுப்பியது.

வருண் சக்கரவர்த்தி

சுழற்பந்துவீச்சில் தன்னுடைய திறமையை நிரூபித்த வருண் சக்கரவர்த்தி, 2017-ம் ஆண்டு ஜூபிலி கிரிக்கெட் கிளப்பிற்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார். அங்கு 7 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளராக எல்லோரையும் திரும்பிபார்க்க வைத்தார். அங்கிருந்து 2018 டிஎன்பிஎல் டி20 லீக்கில் மதுரை பந்தர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், அவ்வணி பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அப்போது தான் அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது, அங்கிருந்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டை எப்படி அணுகவேண்டுமென்ற அனைத்தையும் கற்றுக்கொள்ள ஏதுவான சூழல் அமைந்தது. சிஎஸ்கேவை தொடர்ந்து, KKR அணிக்காகவும் நெட் பவுலராக செயல்பட்டார் வருண் சக்கரவர்த்தி.

வருண் சக்கரவர்த்தி

பின்னர் 2018-ம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணிக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். அங்கு 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அங்கிருந்து 2018 ரஞ்சிக்கோப்பை தொடரில் தன்னுடைய முதல் தர கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றார்.

ஐபிஎல்லில் தோல்வி to  கைவிட்ட பிசிசிஐ!

இந்தமுறை 2019 ஐபிஎல் ஏலத்தில் கவனம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, பஞ்சாப் அணியால் 8.4 கோடிக்கு வாங்கப்பட்டார். எல்லாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது, இனி ஏற்றம்தான் என்ற கனவோடு இருந்த அவருக்கு, அறிமுக ஐபிஎல் போட்டியே சோதனையாக மாறியது. முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 25 ரன்களை விட்டுக்கொடுத்த வருண் சக்கரவர்த்தி சிறந்த ஐபிஎல் தொடக்கத்தை பெறவில்லை. பஞ்சாப் அணி வருண் மீதான நம்பிக்கையை இழந்து அவரை வெளியேற்றியது.

வருண் சக்கரவர்த்தி

பின்னர் 2020 ஐபிஎல்லில் கொல்கத்தா அணி அவரை விலைக்கு வாங்க, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார் வருண் சக்கரவர்த்தி. அங்கிருந்து ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக ஜொலித்த வருண் சக்கரவர்த்திக்கு, 2020-ல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் விளையாட இடம் கிடைத்தது. ஆனால் இந்தமுறை காயம் அவரை பழிவாங்கியது.

வருண் சக்கரவர்த்தி

ஆனாலும் 2021-ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்ற வருண் சக்கரவர்த்தி, 2021 டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அங்கு அவரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை, இந்திய அணியும் லீக் சுற்றோடு வெளியேறியது, அப்போது இந்திய அணியிலிருந்து வெளியேறிய அவரை அதற்குபிறகு பிசிசிஐ திரும்பிப்பார்க்கவே இல்லை.

வலுவாக திரும்பிவந்த சுழல் சக்கரவர்த்தி..

கோவிட் தொற்று, மீண்டும் மீண்டும் காயம், விக்கெட் வீழ்த்தவில்லை, உடல் பருமன் என்ற பல்வேறு காரணங்களால் வாய்ப்பை இழந்தாலும் தன்னுடைய பந்துவீச்சை மெருகேற்றிக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்த வருண் சக்கரவர்த்தி, லெக்-பிரேக், ஆஃப்-பிரெக், கூக்ளி, கேரம் பால், ஃபிலிப்பர், டாப் ஸ்பின், யார்க்கர் ஸ்லைடர் என பல்வேறு வேரியேசன்களை தன்னுடைய பந்துவீச்சில் கொண்டுவந்து “நான் வர்றன் திரும்ப” என ஒரு ரியல் மிஸ்ட்ரி ஸ்பின்னராக தன்னை மாற்றிக்கொண்டார்.

varun chakravarthy

தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியிருக்கும் வருண் சக்கரவர்த்தி 33 வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தியுள்ளார். பும்ராவிற்கு மாற்றுவீரராக 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அவர், ‘பத்திக்கிச்சு ஒரு ராட்சசத் திரி’ என நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். அவர் என்ன வீசுகிறார் என்பதே தெரியாமல் நியூசிலாந்து பேட்டர்கள் ஆடுகளத்தில் டான்ஸ் ஆடியது, இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அறிமுகமாகி விளையாடிய 2வது ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலராக வரலாற்று சாதனை படைத்துள்ளார் வருண் சக்கரவர்த்தி.

2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்தியாவிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், மிஸ்ட்ரி பந்துவீச்சில் மிரட்டிவரும் வருண் சக்கரவர்த்தி ’கேம் சேஞ்சராக’ இருப்பார் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியும், இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

26 வயதில் சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி கனவுகண்டதோடு, அதில் வெற்றியும் பெற்றிருக்கும் வருண் சக்கரவர்த்தி ‘இன்றைய இளம் தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டு’ என்றால் மிகையாகாது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையோடு வாருங்கள் எங்களின் ’சுழல்’ சக்கரவர்த்தி!