செய்தியாளர் - சந்தான குமார்
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி, 1882ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து செய்தித் தாள் இங்கிலாந்து கிரிக்கெட் இறந்து விட்டது, ஓவல் மைதானத்தில் புதைக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது என கூறியது. இதனால் தான் இந்த தொடருக்கு ஆஷஸ் என பெயரிடப்பட்டது.. அன்றிலிருந்து இன்று வரை ஆஷஸ் தொடர் ஒரு மானப்பிரச்சினையாக இரு நாட்டுக்கும் மாறியுள்ளது.
1882ஆம் ஆண்டு இருந்து 2025ஆம் ஆண்டு வரை 143 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த தொடரில் இதுவரை 361 போட்டிகள் நடந்திருக்கிறது. இதில் 152 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 110 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கிறது. 99 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 73 ஆஷஸ் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 34 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் கைப்பற்றி இருக்கிறது. 7 தொடர்கள் சமனில் முடிவடைந்து இருக்கிறது.
2010ஆம் ஆண்டுக்கு பின் தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லவில்லை, கடந்த 2022 ஆம் ஆண்டு 4 க்கு 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நேரத்தில்தான் இங்கிலாந்து அணி பல்வேறு மாற்றங்களை செய்தது.. அப்போதுதான் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார், அதன் பின்தான் இங்கிலாந்து அணி BAZBALL ஐ விளையாட தொடங்கியது.
சொல்லப்போனால் எதற்காக BAZBALL ஐ இங்கிலாந்து தொடங்கியதோ, அதன் கிளைமாக்ஸை தற்போது நெருங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிலாந்து விளையாடி வரும் நிலையில் நாளை இந்த தொடர் தொடங்குகிறது. இன்னும் சொல்ல போனால் இங்கிலாந்து அணி இந்த தொடரை தொடங்கும் முன்பே FAVOURITES ஆக தொடங்குகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல டேவிட் வார்னர் ஓய்வுக்கு பின் உஸ்மான் காவாஜாவுடன் ஓப்பனிங் விளையாட 6 வீரர்களை மாற்றியும் தற்போது வரை வெற்றி கிடைக்கவில்லை என்பதால் 7 வது வீரராக ஜேக் WEATHERELDஐ களமிறக்குகிறது ஆஸ்திரேலியா. தன்னுடைய அறிமுக போட்டியே ASHES என்பதால் இதனை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று பார்க்க வேண்டியுள்ளது.
அதேபோல கேமரன் கிரீன் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார், நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் பெரிய ரன்களை அடிக்காத மார்னஸ் லபுஷேன் முதல்தர போட்டிகளில் ரன்கள் அடித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இருவரும் எப்படி விளையாடுவார்கள் என்ற கேள்வி உள்ளதால், இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை, இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் அந்த அணிக்குள் இருக்கின்றது. ஒரு மாதத்திற்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று தற்போது அங்கு உள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சியில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும், இருவரும் அடிக்கடி காயத்திற்கு உள்ளாகும் நபர்கள் என்பதால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறுவார்கள்.
பேட்டிங்கை பொறுத்தவரை இங்கிலாந்து மண்ணில் தங்களுக்கு ஏற்ற மைதானங்களில் விளையாடியது போல, ஆஸ்திரேலியாவில் முழுக்க முழுக்க BAZBALL விளையாட முடியுமா என்ற கேள்விகளும் உள்ளது..?
இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லப் போவது யார்? பென் ஸ்டோக்ஸ் தனது பேஸ்-பால் கிரிக்கெட் மூலம் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கமும், ஆஸ்திரேலியா மண்ணில் நாங்கள் தோற்க மாட்டோம் என தொடர்ந்து வென்று வரும் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணம் ஒரு பக்கம் என இந்த 20 ஆண்டுகளில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு தொடராக இந்த தொடர் மாறியுள்ளது.