vinod kambli web
கிரிக்கெட்

நோயுடன் போராடும் வினோத் காம்ப்ளிக்கு உதவ தயார்.. ஆனால் ஒரு நிபந்தனை! சக வீரர்களின் கோரிக்கை!

மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரராக வலம்வந்திருக்க வேண்டிய வினோத் காம்ப்ளி, தற்போது நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அவருடைய நண்பர்களான சகவீரர்களின் நெஞ்சை ஈரமாக்கி உதவ முன்வரவைத்துள்ளது.

Rishan Vengai

1988-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டானது இரண்டு திறமையான சிறுவர்களை அடையாளம் கண்டது. ஹாரிஸ் ஷீல்ட் அரையிறுதிப்போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட 15 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள், தனித்தனியாக 326 நாட் அவுட், 349 நாட் அவுட் என ஆட்டமிழக்காமல் உலக கிரிக்கெட்டின் ஐகானாக மாறும் திறமையை தங்களுக்குள் கொண்டிருந்தனர்.

அதில் 15 வயது சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் 1989-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிரிக்கெட்டின் கடவுள் என்ற அந்தஸ்தை பெற்றார். அதேபோல 16 வயது சிறுவனாக இருந்த வினோத் காம்ப்ளி 1991-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாக தன்னுடைய 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டி என இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து 2 இரட்டை சதங்களை பதிவுசெய்து எந்த உலகவீரரும் படைக்காத சாதனையை படைத்தார்.

அபரிவிதமான திறமையுடன் உலாவந்த வினோத் காம்ப்ளி குடிப்பழக்கம் என்ற ஒரு மோசமான பிரச்னைக்குள் சிக்கி சிறிது காலத்திலேயே காணாமல் போனார். 1991-ல் அறிமுகமான அவர் 2000-ல் தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார்.

வினோத் காம்ப்ளி

இன்னொரு சச்சினாக வலம்வந்திருக்க வேண்டிய திறமையான வீரர், தற்போது பல்வேறு உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய பால்ய கிரிக்கெட் நண்பனான சச்சின் டெண்டுல்கர் தொழில் ரீதியாகவும், பண ரீதியாகவும் நிறைய உதவிகளை செய்தபோதிலும் ஒழுக்கமின்மையால் தற்போது நீண்ட நோய்வாய்ப்பட்டுள்ளார் வினோத் காம்ப்ளி.

இந்நிலையில் தான் தன்னுடைய சிறுவயது பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவு விழாவில் பங்கேற்ற வினோத் காம்ப்ளி உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டது தன்னுடைய சகவீரர்களின் நெஞ்சை ஈரமாக்கியுள்ளது.

உதவ முன்வரும் 1983 ஹீரோஸ்.. ஆனால் ஒரு நிபந்தனை!

வினோத் காம்ப்ளியுடன் முன்னாள் பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவு விழாவில் சச்சின் டெண்டுல்கர், பிரவின் ஆம்ரே, பல்விந்தர் சிங் சந்து மற்றும் சஞ்சய் பாங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களில் ஒருவரான பல்விந்தர் சிங் சந்து 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர்கள் வினோத் காம்ப்ளிக்கு உதவ தயாராக இருப்பதை எடுத்துக்கூறினார். ஆனால் அவருக்கு உதவவேண்டுமென்றால் ஒரு கோரிக்கையையும் சக வீரர்கள் முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

1983 ஹீரோஸ் வைக்கும் ஒரே நிபந்தனையை வெளிப்படுத்திய அவர், “கபில்தேவ் என்னிடம் தெளிவாகக் கூறினார், வினோத் காம்ப்ளி மறுவாழ்வுக்கு (rehab treatment) செல்ல விரும்பினால், நாங்கள் அவருக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு அவர் முதலில் அதிலிருந்து வெளிவர நினைக்க வேண்டும். அப்படியானால் தான் சிகிச்சைக்கான கால எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் எங்களால் முழுமையாக உதவமுடியும்" என்று தெரிவித்ததாக சந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடன் கூறியுள்ளார்.

ஆனால் வினோத் காம்ப்ளி மறுவாழ்வு சிகிச்சைக்கு செல்வது தேவையற்றது என்றும், அவர் இதுவரை 14 முறை அதற்கு சென்றும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றும், வினோத் காம்ப்ளி தற்போது கடுமையான உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு நண்பரான காம்ப்லிக்கு நெருக்கமான முன்னாள் முதல்தர நடுவரான மார்கஸ் குடோ டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் தெரிவித்துள்ளார்.