2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காலிறுதி போட்டிகள் நடந்துவந்தன.
3 காலிறுதி போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், மும்பை, விதர்பா மற்றும் குஜராத் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
காலிறுதி போட்டியில் விதர்பாவை எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.
இரண்டாவது காலிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்பா அணியில் கருண் நாயர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். கருண் நாயர் 18 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 122 ரன்கள் அடிக்க, விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி விதர்பா பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 38 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா அணி 272 ரன்கள் சேர்த்து அசத்தியது. 401 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் விதர்பா அணி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அங்கு நடப்பு சாம்பியன் அணியான மும்பையை எதிர்த்து விளையாடுகிறது விதர்பா அணி.
மற்றொரு அரையிறுதிக்கு குஜராத் அணி முன்னேறியிருக்கும் நிலையில், 4வது காலிறுதி போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா அணிகள் வெற்றிக்காக போராடி வருகின்றன.