தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசிப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்த இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 டி20 போட்டிகள் தொடரில், 2-1 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. லக்னோவில் நடைபெற இருந்த 4ஆவது போட்டி, கடுமையான பனி காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தென்னாப்பிரிக்கா டாஸ் ஜெயித்த நிலையில், இந்தியாவை பேட் செய்ய பணித்தது. முன்னதாக, காயம் காரணமாக ஷுப்மன் கில், ஹர்சித் ராணாவுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி, முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் புகுந்தனர். இந்த தொடக்க ஜோடி, சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சாம்சன் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். வழக்கம்போலவே சூர்யகுமார் யாதவ் ஏமாற்றினாலும், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கவும் உதவியது. ஹர்திக் - திலக் கூட்டணி 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அவர்களின் அதிரடியால் இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 63 குவித்தார். இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் (65) மற்றும் பிரெவிஸ் (31) ஆகியோரைத் தவிர பிற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், பும்ரா 2விக்கெட்டுகளும், பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.