2025 யு19 ஆசியக்கோப்பை தொடக்க போட்டியில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 95 பந்தில் 171 ரன்களில் அவுட்டாகி, இரட்டை சதத்தை 29 ரன்னில் மிஸ் செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 433 ரன்கள் சேர்த்தது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே இன்று டிசம்பர் 12 முதல் டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் இன்று தொடங்கிய ஆசியக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி யுஏஇ அணியையும், பாகிஸ்தான் அணி மலேசியாவையும் எதிர்த்து விளையாடுகின்றன.
துபாயில் உள்ள ஐசிசி அகாடமி கிரவுண்டில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
9 சிக்சர்கள் 5 பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்த சூர்யவன்ஷி 56 பந்தில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து 14 சிக்சர்கள் 9 பவுண்டரிகளை பறக்கவிட்ட சூர்யவன்ஷி இரட்டை சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 95 பந்தில் 171 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து ஆரோன் ஜியார்ஜ், மல்கோத்ரா இருவரும் தலா 69 ரன்கள் விரட்ட 50 ஓவர் முடிவில் 433/6 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி.
மற்றொரு போட்டியில் மலேசியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 345/3 ரன்கள் குவித்துள்ளது. சமீர் மினாஸ் 177 ரன்களும், அஹ்மத் ஹுசைன் 132 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.