pooran - salt - surya- rinku
pooran - salt - surya- rinku PT
கிரிக்கெட்

Rewind 2023: 11 வீரர்களை கொண்ட தரமான சர்வதேச டி20 அணி.. சிறப்பாக செயல்பட்ட 5 இந்திய வீரர்கள்!

Viyan

ஃபில் சால்ட், இங்கிலாந்து

Philip Salt

இந்த ஆண்டு 8 டி20I போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஃபில் சால்ட். அதில் 2 சதங்கள்! 56.28 என்ற அபாரமான சராசரியில் 394 ரன்கள் குவித்திருக்கிறார் சால்ட். அதுவும் 169.09 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

யஷஷ்வி ஜெய்ஸ்வால், இந்தியா

Yashasvi Jaiswal

14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இளம் யஷஷ்வி, 430 ரன்கள் எடுத்திருக்கிறார். அதில் ஒரு சதமும் 3 அரைசதங்களும் அடக்கம். பெரிய ரன்கள் அடிக்காத போட்டிகளிலும் கூட புயல் வேகத்தில் விளையாடி அணிக்கு அதிரடி தொடக்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்தார் ஜெய்ஸ்வால். பவர்பிளேவை முழுமையாகப் பயன்படுத்தி முதல் 6 ஓவர்களிலேயே ரன் ரேட்டை நன்றாக அதிகப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார் அவர்.

சூர்யகுமார் யாதவ், இந்தியா

suryakumar

டி20 என்றாலே சூர்யா தான் என்று ஆகிவிட்டது. இதுவும் அவருடைய ஃபார்மட் ஆகிவிட்டது. அதை இந்த ஆண்டும் உண்மை ஆக்கியிருக்கிறார் அவர். 17 இன்னிங்ஸ்களில் 733 ரன்கள் விளாசியிருக்கிறார் சூர்யா. அதிலும் 2 சதங்கள் விளாசியிருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்தியாவை வழிநடத்தவும் செய்தார் சூர்யா. அதனால் இந்த அணிக்குக் கேப்டனும் அவர் தான்.

நிகோலஸ் பூரண், வெஸ்ட் இண்டீஸ்

நிக்கோலஸ் பூரன்

சர்வதேச டி20, ஐபிஎல், மேஜர் லீக் கிரிக்கெட்... ஆடிய இடமெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார் பூரண். பாரபட்சம் பார்க்காமல் பட்டையைக் கிளப்பியிருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தூணாக உருவெடுத்திருக்கிறார். இந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் 162.71 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 384 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர்.

சிகந்தர் ராஸா, ஜிம்பாப்வே

Sikandar Raza

ஆல்ரவுண்டராக இந்த ஆண்டு அசத்தியிருக்கும் சிகந்தர் ராஸா, 51.50 என்ற சராசரியில் 515 ரன்கள் விளாசியிருக்கிறார். 11 இன்னிங்ஸ்களில் 6 முறை அரைசதமும் கடந்திருக்கிறார். பேட்டிங்குக்கு நிகராக பௌலிங்கிலும் மிரட்டியிருக்கும் அவர், 17 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். முக்கியமான போட்டிகளிலெல்லாம் அந்த அணியின் ஆப்த்பாந்தவனாக திகழ்ந்திருக்கிறார் அவர்.

ரிங்கு சிங், இந்தியா

Rinku Singh

ஒரு ஃபினிஷராக சர்வதேச அரங்கிலும் தன் கால் தடத்தைப் பதித்திருக்கிறார் ரிங்கு சிங். இந்த ஆண்டு இந்தியாவுக்காக அவர் ஆடிய 8 இன்னிங்ஸ்களில் 65.50 என்ற மெகா சராசரியில் 262 ரன்கள் விளாசியிருக்கிறார் அவர். அதுவும் சாதாரணமாக இல்லை. 180.68 என்ற மாபெரும் ஸ்டிரைக் ரேட்டில்!

ஷகிப் அல் ஹசன், வங்கதேசம்

ஷாகிப் அல் ஹசன்

இந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் பந்துவீச்சில் நல்ல தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். விளையாடிய 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவர், அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கில் பெரிய ஸ்கோர்கள் எடுக்காவிட்டாலும் ஆடிய போட்டிகளிலெல்லாம் ஆட்டமிழக்காமல் நல்ல தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார்கள்.

அல்சாரி ஜோசஃப், வெஸ்ட் இண்டீஸ்

அல்சாரி ஜோசஃப்

2023ம் ஆண்டு ஆடிய 9 சர்வதேச டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அல்சாரி ஜோசஃப். கிட்டத்தட்ட ஒவ்வொரு 12 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார் அவர். அவரது எகானமி (10.36) கொஞ்சம் மோசமாக இருந்தாலும், 2 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் எடுக்கும் அவரது வித்தைக்காக நிச்சயம் அவரை இந்த அணிக்கு எடுக்கலாம்.

அர்ஷ்தீப் சிங், இந்தியா

அர்ஷ்தீப் சிங்

இந்திய அணிக்கு டி20 ஃபார்மட்டில் முக்கியமான அங்கமாக உருவெடுத்திருக்கிறார் ஆர்ஷ்தீப் சிங். இந்த ஆண்டு மட்டும் 21 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர், 26 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். ஒருசில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் எப்படியும் கம்பேக் கொடுத்து மீண்டுவிடுகிறார் ஆர்ஷ்தீப்.

ரவி பிஷ்னாய், இந்தியா

ravi bishnoi

லெக் ஸ்பின்னர் தான். ஆனால் கூக்ளி மட்டும் தான் வீசுவார். அது தெரிந்தாலும் பேட்ஸ்மேன்களால் அவரை எதிர்கொள்ள முடிவதில்லை. இந்த ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர். அதுவும் 7.2 என்ற எகானமியில் அசத்தியிருக்கிறார் அவர். பவர்பிளேவிலும் கூட விக்கெட் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

டஸ்கின் அஹமது, வங்கதேசம்

taskin ahmed

எட்டே போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் டஸ்கின் அஹமது. போட்டிக்கு எப்படியும் 2 விக்கெட்டுகள் என்ற வீதத்தில் நல்ல செயல்பாடுகள் காட்டியிருக்கிறார் அவர். அதுவும் 7.36 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட் வேட்டையும் நிகழ்த்தியிருக்கிறார்.