suryakumar yadav web
கிரிக்கெட்

”நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம்..” - கைக்குலுக்க மறுத்தது குறித்து சூர்யகுமார் யாதவ்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் பேசியுள்ளார்.

Rishan Vengai

8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தான் நிர்ணயித்த 127 ரன்களை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றிவாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியா

ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, ​​இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.

மறுபுறம், போட்டிக்குப் பிறகு பரிசளிப்பின்போதுகூட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செல்லவில்லை. இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.

கேப்டன் சூர்யகுமார் சொன்னது என்ன?

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிபெற்றதற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காதது குறித்து விளையாட்டை விட சில விஷயங்கள் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.

அப்போது பேசிய அவர், “எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான சரியான பதிலடியைக் களத்தில் கொடுத்துள்ளோம். விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். இதை நான் ஏற்கனவே பரிசளிப்பு விழாவிலேயே கூறிவிட்டேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும், அவர்களது குடும்பங்களுடனும் நாங்கள் உறுதியாகத் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

நான் சொன்னது போல, இந்த வெற்றியை 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவப் படைகளுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிப்பதைப் போல, எங்களால் முடிந்தபோதெல்லாம், அவர்களைப் புன்னகைக்க வைக்கும் வாய்ப்புகளைக் களத்தில் ஏற்படுத்திக் கொடுப்போம்” என்று பேசினார்.