ரிஷப் பண்ட் பல்டி செலப்ரேஷன் web
கிரிக்கெட்

”ரிஷப் பண்ட் அப்படியெல்லாம் பல்டி அடிக்கக் கூடாது!” - அறுவை சிகிச்சை நிபுணர் கொடுத்த அட்வைஸ்!

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிவந்து விளையாடி வருகிறார். அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் பல்டி அடிப்பது தேவையற்றது என டாக்டர் கூறியுள்ளார்.

Rishan Vengai

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு காரில் சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட், தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் விபத்தில் சிக்கினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அதிகப்படியான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டின் கழுத்து முதல் முழங்கால் வரை தோல்பகுதிகள் சேதமாகியிருந்தன.

ரிஷப் பண்ட்

பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலைமையிலும் ‘என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா’ என்ற கேள்வியை தான் ரிஷப் பண்ட் கேட்டார் என்று அவருடைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா வெளிப்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் சிகிச்சையில் இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு டி20 உலகக்கோப்பை சாம்பியனாக மாறியது மட்டுமில்லாமல், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் திரும்பி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

பண்ட் பல்டி அடிக்க கூடாது..

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய ரிஷப் பண்ட், சதமடித்த பிறகு பல்டி அடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது 2025 ஐபிஎல்லில் சதமடித்து பல்டி அடித்த கையோடு இரண்டாவது முறையாக இங்கிலாந்தில் வந்தது.

இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்த கூடாது என விபத்தின்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர் டின்ஷா பர்திவாலா கூறியுள்ளார்.

தி டெலிகிராப் உடனான உரையாடலில் பேசியிருக்கும் ரிஷப் பண்ட்டின் டாக்டர் பர்திவாலா, “ரிஷப் பண்ட் உடற்பயிற்சி நிபுணரின் உதவியால் தான் இவ்வளவு வேகமாக முன்னேற்றத்தை கண்டார். அதனுடன் அவர் மிகவும் சுறுசுறுப்பானவர், அவரின் உடலில் அந்த நெகிழ்வுத்தன்மையும் உள்ளது. அதனால் தான் அவரால் தொடர்ந்து பல்டி அடிக்க முடிகிறது. இருப்பினும் இது தேவையற்ற ஒன்று என்றே நான் கூறுவேன்.

அவர் முதலில் சிகிச்சைக்கு வந்தபோது, ​​அவருக்கு வலது முழங்கால் இடம்பெயர்ந்திருந்தது. அவரது வலது கணுக்காலிலும் காயம் ஏற்பட்டது, மேலும் உடல் முழுதும் சிறிய காயங்கள் நிறைய இருந்தன. அவரின் உடலில் நிறைய தோல் உரிந்திருந்தன. அதாவது விபத்தின் போது அவரது கழுத்தின் பின்புறம் முதல் முழங்கால் வரை உள்ள முழு தோலும் முற்றிலும் உரிந்து போனது. இவை அனைத்தையும் கடந்துவந்து தற்போது உயிருடன் இருப்பதற்கு ரிஷப் பண்ட் மிகவும் அதிர்ஷ்டசாலி - மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று கூறியுள்ளார்.