ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போட்டி நடைபெறக்கூடாது; ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
2025 ஆசிய கோப்பை தொடரானது யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இரண்டு நாடுகளுக்கு இடையே விரிசல் அதிகமாகியிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டி நடைபெற கூடாது என உச்சநீதிமன்றத்தில் சட்ட மாணவர்கள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்கக்கூடாது என்றும், அப்படி நடப்பது தேசிய நலனுக்கு எதிரானது மட்டுமில்லாமல் தாக்குதலில் உயிர் இழந்த ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாக அமையும் என்று நான்கு சட்ட மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”இது ஒரு போட்டி மட்டுமே, ஞாயிற்று கிழமை போட்டி நடக்கவிருக்கும் நிலையில், இப்போது என்ன செய்ய முடியும்? போட்டி தொடர்ந்து நடக்க வேண்டும்” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.