இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்வது நம் நாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு மறைமுகமாக பங்களிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் நேரடியாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார். இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ரூ.2.34 கோடிக்கு அந்த அணி வாங்கியது. இதன்மூலம் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதியை அந்த அணி முதல்முறையாக மாற்றியது.
அதாவது, இந்திய - பாகிஸ்தான் இருநாட்டு உறவுகள் தொடர்பாக, ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதேபோல தென்னாப்பிரிக்காவின் SA20 மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ILT20 ஆகிய இதர வெளிநாட்டு டி20 தொடர்களிலும் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்கப்படுவதில்லை.
இந்நிலையில் அந்த விதியை உடைத்து, இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து காவ்யா மாறனுக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, அவ்வணியின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், அப்ரார் அகமதுவின் ஒப்பந்தம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில், “பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை, இறுதியில் வருமானவரி மூலம் அந்நாட்டு அரசாங்கத்துக்குச் செல்கிறது. அந்தப் பணம், ஆயுதங்களை வாங்குவதற்கு வழிவகை செய்கிறது. பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையானது மறைமுகமாக இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு பங்களிக்கிறது.
தி ஹண்ட்ரட் அணியின் பயிற்சியாளரான நியூசிலாந்தைச் சேர்ந்த வெட்டோரிக்கு இந்த நிலைப்பாடு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம் என்றாலும், இந்திய உரிமையாளர்கள் இந்நிலையைப் புரிந்துகொண்டு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். உரிமையாளர் இந்தியராக இருக்கும் பட்சத்தில், பணம் செலுத்துவது இந்திய நிறுவனம் அல்லது வெளிநாட்டு துணை நிறுவனம் என்றாலும், அவர் இந்தியர்களின் உயிரிழப்புக்குப் பங்களிக்கிறார். இது எளிமையான உண்மை. வேறு எந்த நாடும் விளையாடாத ஒரு தொடரில் வெற்றி பெறுவது, இந்திய உயிர்களைவிட முக்கியமானதா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.